

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 600 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களில் முட்டை விலை 40 பைசா சரிந்ததால் கோழிப்பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கைள உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
அவற்றின் மூலம், தினமும் சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. அதனை கோழிப்பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடும் குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை விலை அதிகபட்சமாக கடந்த மாதம் 640 பைசா என்ற உச்சத்தை தொட்டது. இச்சூழலில் கடந்த 4-ம் தேதி முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிந்து 620 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று மீண்டும் 20 பைசா சரிந்து 600 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை தேங்கும் அபாயம் உருவாகியது. இதன் எதிரொலியாக முட்டை விலையில் சரிவு ஏற்பட்டிருக்கலாம்.
அதேவேளையில் பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டிருக்கலாம் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாக்களில்): சென்னை 670, பர்வாலா 585, பெங்களூ ரு 665, டெல்லி 650, ஹொஸ்பேட் 605, ஹைதராபாத் 580, கொல்கத்தா 650, மும்பை 660, மைசூர் 670, விஜயவாடா620.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.142 ஆக அறிவிக்கப் பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.