

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த 3 நாளில் 15 காசுகள் அதிகரித்து இருப்பது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) கூட்டம் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டை விலை ரூ.5.70 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி முட்டையின் விலை ரூ.6.80 ஆக இருந்தது. இதுதான் முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும்.
இந்நிலையில் படிப்படியாக முட்டை விலை சரிந்து கடந்த மாதம் 21-ம் தேதி ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 16 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 5-ம் தேதி முட்டை விலை 5 காசுகள் உயர்த்தி ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் 5 காசுகள் உயர்த்தி ரூ.5.30 ஆகவும், நேற்று மீண்டும் 5 காசு உயர்த்தப்பட்டு ரூ.5.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்திருப்பது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களினால் முட்டை தேவை அதிகரித்துள்ளது. அதனால் முட்டை விலை ஏற்றம் கண்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்:
சென்னை ரூ.6, பர்வாலா ரூ.5.50, பெங்களூரு ரூ.5,70, டெல்லி ரூ.6, ஹைதராபாத் ரூ.5.35, மும்பை 550, மைசூரு ரூ.5.80, விஜயவாடா ரூ.5.75, ஹொஸ்பேட் ரூ.5.10, கொல்கத்தா 6.40.
கோழிவிலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.95 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.120 என தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.