

சென்னை: கனரா - சிண்டிகேட் வங்கிகளின் இணைப்புக்கு பின் வங்கியின் வளர்ச்சி 160 சதவீதம் உயர்ந்திருப்பதாக, சென்னையில் நடைபெற்ற சிண்டிகேட் வங்கியின் நூற்றாண்டு விழாவில், கனரா வங்கி துணை பொது மேலாளர் ராகவேந்திரா ராவ் தெரிவித்தார்.
அகில இந்திய சிண்டிகேட் வங்கி ஓய்வூதியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில், சிண்டிகேட் வங்கி நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
கூட்டமைப்பின் மாநிலக் குழு தலைவர் கே.ஆர்.லாரன்ஸ் தலைமை தாங்கினார். சிண்டிகேட் வங்கியின் முன்னாள் பொதுமேலாளர் பி.சந்தான கிருஷ்ணன், கனரா வங்கியின் துணை பொது மேலாளர் ராகவேந்திரா ராவ் கனலா, கூட்டமைப்பின் சேர்மன் கே.உமேஷ் நாயக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில், 75 வயதை கடந்த 50 பேர் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, கனரா வங்கி துணை பொது மேலாளர் ராகவேந்திரா ராவ் பேசுகையில், “சிண்டிகேட் வங்கியுடன் கனரா வங்கி இணைக்கப்பட்டது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது.
இணைப்புக்கு முன் ரூ.15 லட்சம் கோடியாக இருந்த நம் வர்த்தகம், 2025 செப்டம்பர் மாத நிலவரப்படி தற்போது ரூ.26.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வணிகம் பன்மடங்கு பெருகியுள்ளது.
அதேபோல், செப்டம்பர் 2020-ல் வங்கியின் லாபம் ரூ.440 கோடியாக இருந்தது. ஆனால், 2025 செப்டம்பர் மாத நிலவரப்படி, ரூ.4,700 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், கனரா - சிண்டிகேட் வங்கிகளின் இணைப்புக்கு பின் வணிகம் 160 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ஜலீல், பொதுச் செயலாளர் எம்.எஸ்.பட், துணைத்தலைவர் இ.ரஞ்சனி, இணைச் செயலாளர் ஏக்நாத் காம்ப்ளே, மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் இளங்கோவன், குழு தலைவர் கே.ஆர்.லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.