

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு நடுத்தரத் தொழில்துறையை சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி, மின் மோட்டார், வெட்கிரைண்டர், கம்ப்ரஸர் இயந்திர பாகங்கள், வேளாண் உபகரணங்கள் என அனைத்திலும் மூலப்பொருளாக செம்பு உலோகம் இருந்து வருகிறது.
உயர் மின் மற்றும் வெப்பக் கடத்தும் திறன் காரணமாக பல்வேறு துறைகளுக்கு மூலப்பொருளாக செம்பு இருக்கிறது. வாகனத் துறையில் கேபிள்கள், ஸ்விட்ச்- கியர் பாகங்கள், மின்மாற்றிகள், மோட்டார் இயந்திரகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. கட்டிடத்துறையில் முகப்புகள், கூரைகள், குடிநீர் குழாய்கள் மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கோவையில் வாகன உதிரி பாகங்கள், மின்சார வாகனங்கள், பம்புகள் உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், செம்பின் அதிகவிலை பொறியியல் தொழில்களை சமீப காலமாக அதிகளவில் பாதித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக மறுசுழற்சி செய்யப்பட்ட செம்பின் பயன்பாட்டை அதிகரிக்க வைத்துள்ளது.
கோவை சிறு, குறு தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: செம்பின் விலை 60 சதவீதத்துக்கும் அதிகமான உயர்வுடன் உள்ளதால் தொழில் துறையை பாதித்துள்ளது. இரும்பு மற்றும் துத்தநாக விலைகளும் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு கிலோ செம்பின் விலை ரூ.800 ஆக இருந்தது.
இந்நிலையில், தற்போது கோவையில் செம்பின் விலை ரூ.1,450 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன.
செம்பு விலை உயர்வால் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்வை முழுமையாக வாடிக்கையாளர்களிடமும் பெற முடியவில்லை. இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போட்டித்தன்மையை பாதித்துள்ளது.
செம்பு விலை உயர்வு மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட நகரின் முக்கிய தொழிலை பாதித்து வருகிறது. செம்பு விலையேற்றத்தால், வெட்கிரைண்டர், கம்ப்ரஸர் உள்ளிட்ட செம்பு உலோகத்தை பிரதானமாக பயன்படுத்தும் 18 சிறு, குறு நடுத்தர தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
30 சதவீதம் முதல் 70 சதவீதம் விலை உயர்வு ஒவ்வொரு துறையிலும் ஏற்படுகிறது. ஆனால் அதனை உடனடியாக விலை ஏற்றி பொதுமக்களிடம் பெற முடியாது.
இதனால் உற்பத்தியாளருக்கு உற்பத்தி குறைவதுடன், ஆர்டரும் குறைகிறது. மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.