Reacher Season 4: நான்-ஸ்டாப் ‘த்ரில்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்

Reacher Season 4: நான்-ஸ்டாப் ‘த்ரில்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்
Updated on: 
2 min read

புகழ்பெற்ற எழுத்தாளர் லீ சைல்டின் 13-வது நாவலான ‘கான் டுமாரோ’ (Gone Tomorrow) கதையைத் தழுவி வெளியாகியுள்ளது ‘ரீச்சர் சீசன் 4’. ஒவ்வொரு சீசனிலும் ஒரு நாவலை தழுவி அதற்கேற்ப ஓர் அட்டகாசமான திரைக்கதையை கொண்டிருக்கும் இந்தத் தொடர் இந்த சீசனில் அந்த சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் தக்கவைத்ததா எனப் பார்க்கலாம்.

முதல் எபிசோடில் மெட்ரோ ரயிலில் அழுது கொண்டிருக்கும் ஒரு பெண்ணை சமாதானம் செய்யச் செல்கிறார் ரீச்சர் (ஆலன் ரிட்சன்). பேசிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போகிறார். அந்த பெண்ணிடம் பேசிய கடைசி ஆள் ரீச்சர் தான் என்பதால் அவரை அமெரிக்காவின் சிஐஏ, எஃப்பிஐ போன்ற அமைப்புகள் விடாமல் துரத்துகின்றன.

அந்த பெண் யார்? அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? ரீச்சரை அமெரிக்க அரசு துரத்துவதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த சீசன்.

90-களின் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், சில்வஸ்டர் ஸ்டாலோன், ஜீன்-கிளாட் வான் டேம் போன்ற அதிரடி ஆக்‌ஷன் நாயகர்களின் பிம்பத்தை, இன்றைய காலகட்டத்தில் ஆலன் ரிட்ச்சன் நமக்கு நினைவூட்டுகிறார். திரையில் அவர் என்ன செய்தாலும் அதை பார்ப்பவர்கள் நம்பிவிடும் அளவுக்கு அவரது உடலும், நடவடிக்கைகளும் இருப்பதே இத்தொடரின் மிகப் பெரிய பலம்.

ஆக்‌ஷனை தாண்டி எமோஷனலாகவும், மிகவும் புத்திசாலியாகவும் இவரது ரீச்சர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசன்களில் ரீச்சர் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாலும், கதையில் ஒரு ஜாலியான, லேசான சூழல் நிலவும். இந்த சீசன் 4-லும் சில நகைச்சுவையான தருணங்கள் உள்ளன.

குறிப்பாக இரண்டாவது எபிசோடில் வரும் ‘ஒன்லி ஃபேன்ஸ்’ கலாச்சாரம் பற்றிய காட்சியை சொல்லலாம். கூடுதலாக ஆங்காங்கே சீரியசான முகத்துடன் ரீச்சர் பேசும் ஒற்றை வசனங்களும் புன்னகையை வரவழைத்து விடும். உதாரணமாக பெயர் சொல்லாத அதிகாரிகளுக்கு இவராகவே டுபாக்கூர் பெயர்களை வைத்து அழைக்கும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன. 

இதுபோன்ற இலகுவான காட்சிகள் இருப்பினும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டார்க் ஆன, வன்முறையான காட்சிகளும் இந்த முறை அதிகம்.

ஒரு காட்சியில் ஒரு ஆளின் தலை லிஃப்டுக்கு அடியில் வைத்து லிஃப்டை ஆன் செய்து துண்டிக்கிறார். இன்னொரு காட்சியில் ஒரு ஆளின் மண்டையை சிறை கம்பிகளுக்கு நடுவே உள்ளே இழுத்து காதுகளை பிய்த்து விடுகிறார். 

வழக்கமாகத் தான் எடுக்கும் முடிவுகளில் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடனும், எதிரிகளை துவம்சம் செய்யும் அசுர பலத்துடனும் வலம் வரும் ஜாக் ரீச்சர் இந்த சீசனில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தன் பலவீனமான சூழல்களையும், தடுமாற்றங்களையும் எதிர்கொள்கிறார். 

எப்படியும் ரீச்சர் எதிரிகளை அடித்து பறக்கவிட்டு தப்பித்து விடுவார், அடுத்த சீசனும் வரும் என்று நமக்குத் தெரிந்திருந்தும் கூட, “ரீச்சர் இந்த முறை தப்பிப்பாரா?" என்ற பயத்தையும் பதைபதைப்பையும் ஒவ்வொரு எபிசோடும் உருவாக்குகிறது. அதுவே இந்த தொடரின் வெற்றி. 

இந்த சீசனின் கதையை தாங்கிப்பிடிக்க பல வலுவான துணைக் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தனது சகோதரியின் அகால மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு சிறு நகர போலீஸ் அதிகாரி, போலீஸ் பணியிலிருந்து விலகும் கட்டத்தில் இருக்கும் தமாரா என்ற பெண் அதிகாரி ஆகியோர் கதையின் ஓட்டதுக்கு பெரிதும் உதவுகிறார்கள்.

இவர்கள் தொடர்பான எமோஷனல் காட்சிகளும் சிறப்பு. மார்ட்டின் ஸ்கார்செஸியின் ‘குட்ஃபெல்லாஸ்’, ‘தி டிபார்டெட்’ போன்ற படங்களில் நடித்த கெவின் கோரிகன் இதில் தமாராவின் பார்ட்னராக வருகிறார். 

இவர் உண்மையிலேயே நம்பிக்கையானவரா அல்லது சுயநலத்திற்காக இயங்குகிறாரா என்பதை எளிதில் கணிக்க முடியாதவாறு இவரது கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. 

எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும், கடைசி நிமிடத்தில் ரீச்சரோ அல்லது அவரது நண்பர்களோ திடீரென வந்து சூழ்நிலையைக் காப்பாற்றுவது இதில் சற்று அதிகமாகவே நடக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் கொஞ்சம் ஓவர்டோஸ். ஒவ்வொரு சீசனிலும் ரீச்சருக்கு ஹீரோயினுடன் ஒரு நெருக்கமான காட்சியை வைத்தே ஆகவேண்டும் என்ற எழுதப்படாத விதிக்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல.

ஆனால், அதை இந்த சீசன் கையாண்ட விதம் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. முதல் சீசனில் உணர்ச்சியற்ற, யாராலும் வெல்ல முடியாத ஒரு வீரனாக அறிமுகமான ரீச்சரின் எமோஷனல் பக்கங்களையும் இந்த சீசன் வெளிக்கொண்டு வந்துள்ளது. நிச்சயம் சீசன் 5 பற்றிய எதிர்பார்ப்பை இடைவிடாத விறுவிறுப்பு கொண்ட இந்த சீசன் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அமேசான் ப்ரைமில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. 

Reacher Season 4: நான்-ஸ்டாப் ‘த்ரில்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்
யார் இந்த ‘டாக்டர் டூம்’? - எதிர்பார்ப்பை எகிறவிடும் மார்வெல் வில்லன்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in