

புதுடெல்லி: இந்திய கடற்படையின் நீர்மூழ்கிகளுக்காக அதிநவீன ஏவுகணைகள் மற்றும் இந்திய ராணுவத்துக்காக அதிநவீன ஆயுதங்களை வாங்க ரூ.4,666 கோடியில் இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்திய கடற்படையில் கல்வாரி, கண்டேரி, கரஞ்ச், வேலா, வகிர், வாக்சீர் ஆகிய 6 நீர்மூழ்கிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இவை பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிகள் ஆகும். இந்த நீர்மூழ்கிகளில் 48 அதிநவீன ஏவுகணைகளை பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இத்தாலியை சேர்ந்த வாஸ் நிறுவனத்துடன் டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வரும் 2028 ஏப். முதல் 2030-க்குள் கருப்பு சுறா வகையை சேர்ந்த 48 ஏவுகணைகளை வாஸ் நிறுவனம் இந்தியாவிடம் வழங்க உள்ளது. இந்த ஏவுகணைகள், கடலுக்குள் மூழ்கி செல்லும் நீர்மூழ்கிகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
மேலும் இந்திய ராணுவ வீரர்களுக்காக அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்களை வாங்க புனேவை சேர்ந்த பிஎப்எல் நிறுவனம், அதானி குழுமத்தின் பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.4,666 கோடி மதிப்பிலான இரு ஒப்பந்தங்களும் மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தாகின.