

கோவை மாவட்டம் அவிநாசி சாலை கணியூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி.
கோவை: சுங்கச்சாவடிகள் கட்டண உணர்வால் கோவை தொழில்துறைக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்ள் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன. இச்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணத்தை வசூலிக்க 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
இவற்றில் சென்னை - கன்னியாகுமரி, திருச்சி - சேலம், சேலம் - கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய மானவையாகும். சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நேற்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. வேன் மற்றும் டெம்போ போன்ற வாகனங்கள் சுங்கச்சாவடியை ஒருமுறை கடந்து செல்ல பழைய கட்டணமான ரூ.145-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் லாரிகளுக்கான கட்டணம் ரூ.295-லிருந்து ரூ.310- ஆகவும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.320-லிருந்து, ரூ.335 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.460-க்கு பதிலாக ரூ.485 ஆக வசூலிக்கப்படும். கோவை-அவிநாசி சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது கோவை தொழில்துறையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.
ஏற்கெனவே காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், கோவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுங்கச்சாவடி கட்டண உயர்வானது சிறிதளவாக இருந்தாலும், அது தொழிலை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்தனர்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் தொழில்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
கரோனா தொற்றுக்கு பிறகு தற்போது மீண்டும் காஸ் தட்டுப்பாடு, மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தொழில் துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், தற்போது சுங்கக் கட்டண உயர்வால் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களின் கட்டணமும் அதிகரிக்கும்.
மேலும் பெட்ரோல், டீசல் எரிபொருளின் விலை அபாய நிலையில் இருப்பதாக வாகன உரிமையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், தற்போதைய இந்த சுங்க கட்டணம் என்பது தொழில்துறையினரின் சுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
கோவையில் இருந்து சேலம் போன்ற நகரங்களுக்கும், பிற நகரங்களுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் போது இந்த கட்டண உயர்வை ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சந்திக்க வேண்டி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பெரியதாக பராமரிப்பு இல்லாத நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பல ஆண்டுகாலகோரிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.