ஓசூர்: வணிகப் பயிரில் இருந்து வரப்புப் பயிராக மாறிய சூரியகாந்தி

20 ஆண்டுகளில் சாகுபடிப் பரப்பளவில் பெரும் சரிவு
கெலமங்கலம் அருகே நெல்லூர் பகுதியில் சாமந்திப்பூ வயலில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக வயல் வரப்புகளில் வளர்க்கப்பட்டுள்ள சூரியகாந்திச் செடிகள்.

கெலமங்கலம் அருகே நெல்லூர் பகுதியில் சாமந்திப்பூ வயலில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக வயல் வரப்புகளில் வளர்க்கப்பட்டுள்ள சூரியகாந்திச் செடிகள்.

Updated on
2 min read

ஓசூர்: கெலமங்கலம் பகுதியில் ஒரு காலத்தில் வணிகப் பயிராக சாகுபடி செய்யப்பட்ட சூரிய காந்தி, தற்போது பயிர்களைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வரப்புப் பயிராகவும், அழகுக்காகத் தோட்டங்களிலும் வளர்க்கப் பட்டு வருகிறது.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் ராகி, சாமை, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களும், நிலக்கடலை, எள், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், ஒரு காலத்தில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி தற்போது, பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வயல் வரப்புகளிலும், அழகுக்காகத் தோட்டங்களிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதால், சூரியகாந்தி சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வயல் வரப்புகளில் சூரியகாந்தி அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. சூரியகாந்தி செடிகள் பூக்கும் காலத்தில் பல்வேறு பூச்சிகளை ஈர்க்கின்றன.

குறிப்பாக, அதன் மஞ்சள் நிறப் பூக்கள் பூச்சிகளைக் கவர்கின்றன. இதனால், சில பூச்சிகளின் கவனம் முக்கியப் பயிரிலிருந்து சூரியகாந்தியின் மீது திரும்ப வாய்ப்புள்ளது. எனவே, சூரியகாந்தியைப் பொறிப் பயிராகப் பயன் படுத்துவது, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் துணை நடவடிக்கையாக அமைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் 1993–94-ம் ஆண்டில் 26.68 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி, தற்போது 2.26 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சாகுபடிப் பரப்பளவு சுமார் 90 சதவீதம் சரிந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், கரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி, தற்போது சில நூறு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது.

சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்ததற்கு தரமான விதைகள் கிடைக்காதது, நோய்த் தாக்குதல், வைரஸ் நோய்கள், சாம்பல் நோய்த் தாக்குதல் ஆகியவற்றால் மகசூல் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்கள் உள்ளன. மேலும், மலேசியா, இந்தோனேசியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் உற்பத்தியாகும் சூரியகாந்தி விதைகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை.

இதனால், விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நோக்கிச் செல்வதுடன், குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் நிலையான வருமானம் தரும் பயிர்களைத் தேர்வு செய்து வருகின்றனர். அதேநேரத்தில், சூரியகாந்தி பூக்கள் பூக்கும் காலத்தில் பல்வேறு பூச்சிகளை ஈர்க்கும் தன்மை கொண்டிருப்பதால், பயிர்களைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

சூரியகாந்திப் பூவின் வண்ணமயமான தோற்றம் காரணமாக, தற்போது தோட்டப் பயிராகவும், சுற்றுலாத் தலங்களில் அழகுச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது. சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, சூரியகாந்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பு மானியங்கள் மற்றும் கொள்முதல் உத்தரவாதங்களை வழங்கினால், இச்சாகுபடி மீண்டும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>கெலமங்கலம் அருகே நெல்லூர் பகுதியில் சாமந்திப்பூ வயலில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக வயல் வரப்புகளில் வளர்க்கப்பட்டுள்ள சூரியகாந்திச் செடிகள்.</p></div>
பழநி முருகன் கோயில் சிவன் சன்னதிகளில் பொருத்த ரூ.2.22 கோடி மதிப்பிலான வெள்ளி நன்கொடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in