

கோவை சர்வதேச விமான நிலையம்.
கோவை: வளைகுடாவில் போர் காரணமாக, கோவையில் இருந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் தடைபடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் உலக நாடுகளின் வணிகச் சங்கிலி அறுபட்டு பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வான் எல்லைகள் மூடப்பட்டு, துபாய், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் வான்வழி போக்குவரத்து பாதிப்பை சந்தித்துள்ளன.
கோவை விமான நிலையத்திலும் கடந்த 4 நாட்களாக ஷார்ஜா, அபுதாபி இடையே விமான போக்குவரத்து தடைபட்டிருப்பதால், தொழில்துறை பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக தொழில் துறையினர் கூறியதாவது: கோவையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தங்க நகைகள், ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்கள், மோட்டார் பம்ப் மற்றும் வேளாண் பொருட்களும், திருப்பூரில் இருந்து பின்னலாடைகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோவையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
போர் காரணமாக விமான சேவை மட்டுமின்றி, கடல்வழி போக்குவரத்தும் பாதிக்கப்பட தொடங்கியிருப்பதுதான் கோவை, திருப்பூர் தொழில்துறையினரின் பெரும் கவலையாக உள்ளது.
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் சரக்குகள், தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால், அதில் ஏற்றுமதி மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது.
இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதை, ஏற்றுமதியில் முக்கிய பங்கை வகிக்கிறது. போர் காரணமாக கடல்வழிப் பாதையில் உள்ள துபாய், கத்தார் மற்றும் தோஹாவுக்கு கப்பல்கள் செல்வதில்லை.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால், சூயஸ் கால்வாய் வழியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா செல்வதற்கு பதிலாக ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும் நீண்ட பாதையை கப்பல்கள் தேர்ந்தெடுக்கின்றன.
இதனால் பயண நேரம் 15 முதல் 20 நாட்கள் அதிகரிக்கிறது. மார்ச் 2-ம் தேதி நிலவரப்படி, சில முன்னணி கப்பல் நிறுவனங்கள், சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
ஒரு கண்டெய்னருக்கு 1500 டாலர் தொடங்கி 3500 டாலர் வரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீத போக்குவரத்து செலவை ஏற்படுத்தும்.
மேலும், துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தில் செயல்பாடுகள் குறைந்துவிட்டதால், ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, “போர் காரணமாக வான்வழி மட்டுமின்றி, கப்பல் போக்குவரத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சரக்கு ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்து வருகிறது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் சாதகமான நிலையில் இருந்தாலும், போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும், வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.
துபாய் இந்தியாவின் ஏற்றுமதி மையமாக செயல்படுவதால், இங்கிருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள், துபாயில் வைத்து பல்வேறு நாடுகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றன.
இச்சூழலில், அங்கு ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஏராளமான சரக்குகள் தேங்கும் அபாயத்தை எட்டியுள்ளன. சரக்குகள் உரிய நேரத்தில் செல்லாதபோது, அவர்கள் அடுத்த ஆர்டரைத் தர தயங்குவார்கள்.
2 வாரங்களுக்கு மேல் போர் நீடித்தால், கோவை, திருப்பூர் போன்ற தொழிலாளர் நகரங்கள் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பையும், பின்னடவையும் சந்திக்கும்” என்றார். கோவை விமானநிலைய அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 28-ம் தேதி முதல் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 4 நாட்கள் அபுதாபி, ஷார்ஜாவுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 28-ம் தேதி மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்துக்கு வந்தனர். தற்போது யாரும் வருவதில்லை” என்றனர்.