

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்த ஒரு உலர் துறைமுகம் (உள்நாட்டுத் துறைமுகம்) அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ஜம்மு ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது: ஜம்முவையும் காஷ்மீரையும் ரயில் போக்குவரத்து மூலம் இணைத்ததற்காக மத்திய அரசுக்கும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
ரயில் இணைப்பு வசதியால் சிமென்ட், கார்கள் போன்ற பொருட்களை ரயில் மூலம் கொண்டு செல்ல முடியும். வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இது மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். ஜம்மு காஷ்மீரில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சுங்கச் சோதனைகளை எளிதாக்கும் வகையில் இங்கு உள்நாட்டு துறைமுகத்தை அதாவது உலர் துறைமுகத்தை மத்திய அரசு அமைத்து தரவேண்டும்.
இதன் மூலம் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, பிற நகரங்களுக்குச் சென்று சுங்கச் சோதனை அனுமதி பெற வேண்டிய தேவை இருக்காது. சுங்கச் சோதனை நடைமுறைகளை ஜம்மு காஷ்மீரிலேயே முடிக்க முடியும். இது எங்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு பெரிதும் பயனளிக்கும். நாங்கள் பல ஆண்டுகளாக ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ரயிலில் பயணம் செய்யக் காத்திருந்தோம்.
இப்போது, நாங்கள் ஜம்முவிலிருந்து கத்ராவுக்கும் மறுபுறம் கத்ராவிலிருந்து ஜம்முவுக்கும் சாலை வழியாகப் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது இந்த ரயில் 8 பெட்டிகளிலிருந்து 20 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு 500 பயணிகள் மட்டுமே பயணம் செய்து வந்த நிலையில், இப்போது 1,400 பேர் இதன் மூலம் பயணிக்க முடியும். இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷயமாகும். இவ்வாறு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.