

புதுடெல்லி: உலகளாவிய மின்னணு சாதன உற்பத்தி மையமாக மாற நினைக்கும் இந்தியாவின் லட்சியத்துக்கு, சீனாவின் புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனால் தொழில் துறையினர் மத்திய அரசின் ஆதரவைக் கோரியுள்ளனர்.
சீனா, தனது நாட்டின் விநியோகச் சங்கிலி மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், அதைப் பாதுகாக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இதற்காக சீனா கொண்டு வந்துள்ள ‘834 மற்றும் 835’ ஆகிய இரண்டு புதிய அரசாணைகள், இந்திய உற்பத்தித் துறையை நேரடியாகப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த புதிய விதிகள் மூலம், சீனாவில் இருந்து தங்களது விநியோகச் சங்கிலியை இந்தியாவுக்கு மாற்றிய அல்லது மாற்றத் திட்டமிடும் ஆப்பிள் போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் முடிவுகளில் தலையிடவும், அவற்றை தன்னிச்சையாக முடக்கவும் சீனக் கட்டுப்பாட்டாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளது.
சீனாவின் இந்த புதிய விதிமுறைகள், மின்னணு சாதன தயாரிப்புப் பரவலாக்கல் உத்திகளுக்கு ஒப்புதல் அளிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மீது தனிநபர் தடைகளை விதிக்கவும் வழிவகை செய்கிறது. அதாவது, இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலைகளைத் தொடங்க அனுமதிக்கும் அதிகாரிகள் மீது சீனா அபராத நடவடிக்கை அல்லது தண்டனைகளை விதிக்க முடியும். இது உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை மேம்படுத்தவும், வெளிநாட்டுச் சார்பைக் குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், மின்னணு உதிரிபாகங்கள், அசெம்பிளிகள் மற்றும் உற்பத்தி உபகரணங்களுக்கு இன்னமும் இந்திய நிறுவனங்கள் சீனாவையே பெருமளவில் சார்ந்துள்ளன. இதனால், சீனாவின் புதிய கட்டுப்பாடுகள் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் எதிர்கால முதலீடுகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவின் ‘சீனா + 1’ உத்தியின் கீழ் முதலீடு செய்வதை எளிதாக்க, சமீபத்தில் தான் இந்தியா தனது ‘பிரஸ் நோட் 3’ கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதனால் இந்தியாவுக்கு உற்பத்தி சந்தை கைமாறிவிடக் கூடாது என்ற நோக்கிலேயே சீனா இந்த தந்திரமான நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, “நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, தொழில் துறையினருக்குத் தேவையான சிறந்த உதவிகள் செய்யப்படும்” என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.