பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி நீக்கம்; டீசலுக்கு கூடுதல் வரி விதிப்பு

பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி நீக்கம்; டீசலுக்கு கூடுதல் வரி விதிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: பெட்ரோல் ஏற்றுமதிக்கான சிறப்பு கூடுதல் கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. லிட்டருக்கு ரூ.2.5 ஆக இருந்த இந்த வரி இப்போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிவேக டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.8.5-ல் இருந்து ரூ.11.5 ஆக உயர்த்தியுள்ளது.

திருத்தப்பட்ட வரி விகிதங்கள் தொடர்பான அறிவிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம், இன்று (அக். 31) அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பெட்ரோல் ஏற்றுமதிக்கான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.2.5-ல் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிவேக டீசல் (high-speed diesel) ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு ரூ.8.5-ல் இருந்து ரூ.11.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. மேலும், எரிபொருள் தட்டுப்பாடும் பல நாடுகளில் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு, பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டில் அவற்றின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீது மத்திய அரசு கடந்த மார்ச் 27-ம் தேதி வரிகளை விதித்தது.

இந்த வரி விகிதங்களை மத்திய அரசு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து வருகிறது. சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த வரி விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே பலமுறை இவை திருத்தப்பட்டுள்ளன. அக்.16 அன்று நடைமுறைக்கு வந்த முந்தைய திருத்தத்தின்படி, பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.2.5-ம், டீசலுக்கு ரூ.8.5-ம், விமான எரிபொருளுக்கு ரூ.10.5ம் வரியாக நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதைய மாற்றங்களின்படி, பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி நீக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி நீக்கம்; டீசலுக்கு கூடுதல் வரி விதிப்பு
பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் 40 வேட்பாளர்கள் அறிவிப்பு

X