12 வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் - ரூ.58,331 கோடி முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றம்
புதுடெல்லி: வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் டெபாசிட் தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையாக ‘உங்கள் பணம், உங்கள் உரிமை' திட்டத்தை மத்திய அரசு அக்.4-ல் தொடங்கியது.
இந்த நிலையில், பொதுத் துறை வங்கி வாரியாக எவ்வளவு தொகை உரிமை கோரப்படாமல் இருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் புலோ தேவி நேதம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் டெபாசிட்டுகளை நிர்வகிப்பதற்காக ரிசர்வ் வங்கி டெபாசிட்டுகள் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (டிஇஏ) (2014) நிதியத்தை உருவாக்கியுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்பு இந்த நிதியத்துக்கு மாற்றப்படுகிறது.
அதேபோன்று முதிர்வடைந்த பிறகு பத்தாண்டுகள் வரை யாரும் உரிமை கோராத டெபாசிட்டுகளும் டிஇஏ நிதியத்துக்கு மாற்றப்படுகின்றன.
அந்த வகையில் ஜூன் 30, 2025 நிலவரப்படி, எஸ்பிஐ வங்கியில் யாரும் உரிமை கோராத ரூ19,330 கோடி டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,911 கோடி, கனரா வங்கி ரூ.6,278 கோடி, பரோடா வங்கி ரூ.5,277 கோடி, யூனியன் வங்கி ரூ.5,105 கோடி தொகை டிஇஏ-நிதிய கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவை தவிர, பேங்க் ஆப் இந்தியா (ரூ.3,934 கோடி), இந்தியன் வங்கி (ரூ.3,740 கோடி), ஐஓபி (ரூ.2,386 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (ரூ.2,092 கோடி), யூகோ வங்கி (ரூ.1,312 கோடி) ஆகிய வங்கிகளிலிருந்தும் உரிமை கோரப்படாத தொகை டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் 12 பொதுத் துறை வங்கிகளில் இருந்த ரூ.58,331 கோடி டெபாசிட்டுகள் டிஇஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
