

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் மாநில அரசுகளின் பங்கு, முன்பை விடப் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் கவலைக்கிடமாக மாறி வருவதாக சமீபத்திய நிதி ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு மாநிலத்தின் நீண்ட காலப் பொருளாதார நலனுக்குத் தேவையான மூலதன முதலீடுகள் (Capex) சுருங்கி, அன்றாட வருவாய் பற்றாக்குறையும் கடன் சுமையும் அதிகரித்து வருகின்றன. இது ஆரோக்கியமான போக்கு இல்லை என்று கவலை தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
‘கவர்ச்சிகரமான இலவசங்களுக்காக நாளைய தலைமுறையின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பலிகொடுப்பது எந்த விதத்திலும் சிறந்த பொருளாதார நிர்வாகமாக இருக்காது. ஒரு மாநிலம் கடன் வாங்குவது தவறு இல்லை. ஆனால், வாங்கும் கடன் முதலீட்டு செலவாக மாற வேண்டும். மாறாக, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்காகவே கடன் வாங்கத் தொடங்கினால், அது மாநிலத்தை மீள முடியாத கடன் சுழலுக்குள் தள்ளிவிடும்’ என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பி.ஆர்.எஸ். (PRS) ஆய்வு:
பி.ஆர்.எஸ். லெஜிஸ்லேட்டிவ் ரிசர்ச் (PRS Legislative Research) மேற்கொண்ட ஆய்வின்படி, நடப்பு 2026-27 நிதியாண்டில் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.68.8 லட்சம் கோடியைச் செலவிடத் திட்டமிட்டுள்ளன. மாநிலங்களுக்கான மானியங்கள் மற்றும் கடன்களைத் தவிர்த்துப் பார்த்தால், இது மத்திய அரசின் செலவினமான ரூ.42.5 லட்சம் கோடியை விட 62 சதவீதம் அதிகமாகும்.
இதனால், நாட்டில் மாநில அரசுகளின் நிதிநிலை எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதைக் கவனிப்பது அவசியமாகிறது. மாநில அரசுகள் தங்கள் வருவாயை விட மிக அதிக அளவில் செலவு செய்கின்றன என்றால், அவை தங்களின் தகுதிக்கு மீறி அதிக அளவில் கடன் வாங்குகிறது என்று பொருள்.
இரண்டு அளவுகோல்கள்:
மாநிலங்களின் நிதி ஆரோக்கியத்தை அளவிட இரண்டு முக்கிய அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது நிதிப் பற்றாக்குறை, இரண்டாவது வருவாய் பற்றாக்குறை.
வருவாய் பற்றாக்குறை:
அரசின் அன்றாட நிர்வாகச் செலவுகள், அதன் அன்றாட வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போது ஏற்படும் பற்றாக்குறையே வருவாய் பற்றாக்குறையாகும். வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக அல்லது வருவாய் உபரியாக இருக்க வேண்டும் என்பதே சிறந்த பொருளாதார விதி. ஒருவேளை இது அதிகரித்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவே மாநில அரசு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.23 சதவீதமாக இருந்த மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை, 2025-26-ல் 0.71 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 20 மாநிலங்களின் வருவாய் இருப்பு மோசமடைந்துள்ளது. 2022-23 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், மாநிலங்களின் வருவாய் செலவினங்கள் 8.8 சதவீத வளர்ச்சி கண்டாலும், வருவாய் வரவுகளின் வளர்ச்சி 7.4 சதவீதமாகவே இருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை:
நிதிப் பற்றாக்குறை என்பது, ஒரு நிதியாண்டில் அரசின் மொத்தச் செலவினங்களுக்கும், கடன் அல்லாத மொத்த வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடாகும். அதாவது, மாநில அரசு புதிதாக வாங்க வேண்டிய மொத்தக் கடனின் அளவை இது குறிக்கிறது.
16-வது நிதிக் குழு வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையானது அந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், நடப்பு நிதியாண்டில் (2026-27) இது 3.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நேரடி நிதியுதவி பாதிப்பு:
மக்களுக்கு மானியங்களுக்கான தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் அரசுகள் சேர்க்கும் திட்டங்கள், காலப்போக்கில் மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
செலவு உயர்வு:
2018-19 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில், நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கான மாநில அரசுகளின் செலவு ஆண்டுக்கு 24 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. இது வழக்கமான மானியங்களின் வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
நிரந்தரச் சுமை: மாநிலங்களின் மொத்த வருவாயில் 52 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்கே செல்கிறது. இதனுடன், நேரடி நிதியுதவித் திட்டங்களும் இணையும்போது, மாநில அரசுகளின் நிதி கையாளும் திறன் சுருங்குகிறது.
தாக்கம்: இத்திட்டங்கள் ஏழைக் குடும்பங்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு உடனடி ஊக்கம் அளித்தாலும், நீண்ட காலத்தில் வருவாய் பற்றாக்குறையையே அதிகரிக்கும்.
நிதி நெருக்கடிக்குப் பிற காரணங்கள்:
மானியங்கள் குறைதல்:
மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. (GST) இழப்பீடு, வருவாய் பற்றாக்குறை மானியங்கள் நிறுத்தப்பட்டது மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதிப்பகிர்வு குறைந்தது ஆகியவை முக்கியக் காரணங்கள்.
திட்டமிடப்படாத செலவுகள்:
வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் நிவாரணச் செலவுகள், மின்சார வாரியங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை மாநில அரசுகள் ஏற்பது, எதிர்பாராத கடன் தள்ளுபடிகள் ஆகியவை நிதிநிலை அறிக்கையில் போடப்பட்ட கணிப்புகளை மீறிச் செல்கின்றன.
வரி வருவாய் குறைவு:
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்குப் பின், மாநில அரசுகளுக்குத் தன்னிச்சையாக வரி விதித்து வருவாயைப் பெருக்கும் அதிகாரம் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான வரிகளை மட்டுமே மாநிலங்கள் பெரிதும் நம்பியுள்ளன. பேட்டரி வாகனங்களின் (EV) வரவு எதிர்காலத்தில் வரி வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடன் சுமை அதிகரிப்பு:
2017-ம் ஆண்டு நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) மறுஆய்வுக் குழு, மாநிலங்களின் கடன் அளவு ஜி.டி.பி.யில் (GDP) 20 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால், தற்போது மாநிலங்களின் கடன் சுமை 28 சதவீதம் முதல் 29.2 சதவீதம் வரையிலும், சில மாநிலங்களில் 35 சதவீதத்தைத் தாண்டியும் உள்ளது.
முதலீட்டுச் செலவுகள் சுருங்குதல்:
கடன் அதிகரிப்பதால் மாநில அரசுகளுக்கு, வருவாயில் சுமார் 13 சதவீதம் வட்டிக்குச் செல்கிறது. இதனால், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில்பூங்காக்கள் அமைப்பதற்கான மூலதனச் செலவுகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன.
வளர்ச்சி பாதிப்பு:
உள்கட்டமைப்பு முதலீடுகள் குறையும்போது, தனியார் முதலீடுகளும் குறையும்; வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமடையும்; இதனால் எதிர்காலத்தில் மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறையும்.
மாநிலங்களின் நிதி நெருக்கடி என்பது வெறும் வருவாய் குறைபாட்டால் மட்டும் உருவானதல்ல. மாறாக, தவிர்க்க முடியாத நிர்வாகச் செலவுகள், தேர்தல் கால கவர்ச்சிகரமான நேரடி நிதித் திட்டங்கள், மத்திய அரசின் மானியக் குறைப்பு மற்றும் வரி விதிப்பு அதிகாரம் சுருங்கியது ஆகியவற்றின் கூட்டு விளைவாகும் என்பது வல்லுநர்களின் பார்வையாக இருக்கிறது.