

கும்பகோணம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் பித்தளை பானை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
பொங்கல் பண்டிகையன்று பெரும்பாலானவர்கள் மண் பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். ஆனால், சிலர் பித்தளை பானைகளில் பொங்கல் வைப்பதும் வழக்கமாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கும்பகோணத்தில் பித்தளை பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
பொங்கலையொட்டி, கும்பகோணத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பித்தளை பானைகளை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து குவித்து வைத்துள்ளனர். ஆனால் மூலப் பொருட்களின் விலை உயர்வால் அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்கச் செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 110 பித்தளை பட்டறைகள், 75 மொத்த விற்பனை கடைகள், 100-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு வடிவமைக்கப்படும் பித்தளை பாத்திரங்கள், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பித்தளை பாத்திரங்களுக்கு மூலப்பொருளாக விளங்கும் காப்பர் மற்றும் துத்தநாகத்தின் விலை சுமார் 30% உயர்ந்துள்ளது. இதனால், ரூ.900-க்கு விற்கப்பட்ட 1 கிலோ பித்தளை பாத்திரங்கள், தற்போது ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழங்காலங்களில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அப்போது பெரிய பித்தளை பானைகளை வாங்கி கூட்டாக பொங்கலிட்டு கொண்டாடினர். இப்போது, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால், அவர்கள் சில்வர் பானையிலேயே குறைந்த அளவில் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இருப்பினும், கிராமப் புற மக்கள், வசதி படைத்தவர்கள், இன்னும் மகள் வீட்டுக்கு பொங்கல் சீதனமாக பித்தளை பானைகளை சீர்வரிசையாக வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.