

பஞ்ச்குலா: அரசு விரைவில் 'பாரத் டாக்ஸி' சேவையை அறிமுகப்படுத்தும் என்றும், இதன் மூலம் கிடைக்கும் லாபம் ஓட்டுநர்களுடன் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, "மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் முன்முயற்சியின் மூலம், விரைவில் 'பாரத் டாக்ஸி' திட்டத்தை தொடங்கவுள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒவ்வொரு பகுதியும் ஓட்டுநர்களுக்குச் செல்லும். இது வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதோடு, ஓட்டுநர்களின் லாபத்தையும் அதிகரிக்கும்.
ஹரியானா எப்போதும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பால் உற்பத்திக்கு பங்களித்து வருகிறது. மேலும் விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு பதக்க மழையை கொண்டு வந்துள்ளது. அது எந்தத் துறையாக இருந்தாலும் ஹரியானா மக்கள் சாதனை படைத்துள்ளனர். ஹரியானா விவசாயிகள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை பெருமையுடன் உயர்த்தியுள்ளனர்.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் உணவு தானிய உற்பத்தியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்து, உலகில் மரியாதை ஈட்டும் பணியைச் செய்துள்ளன. ஒரு சிறிய மாநிலமாக இருந்தபோதிலும், ஹரியானாவின் தாய்மார்கள், தாய்நாட்டைக் காப்பதற்காக, மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில், எந்தவொரு மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் முப்படைகளிலும் அதிக வீரர்களை வழங்குகிறார்கள். அவர்களின் வீரத்தினால்தான் இந்தியாவின் ராணுவமும் ஆயுதப் படைகளும் பல படையெடுப்புகளை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது.
கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை - இந்த மூன்றும் இணைக்கப்பட்டால், நாட்டில் செழிப்பை உருவாக்க முடியும். 2014-ல் மோடி பிரதமரானபோது, நாட்டின் விவசாய பட்ஜெட் ரூ.22 ஆயிரம் கோடியாக இருந்தது, அது இப்போது ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டுக்கான பட்ஜெட் முன்பு ரூ.80 ஆயிரம் கோடியாக இருந்தது, அதை பாஜக அரசாங்கம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளது" என்று அமித் ஷா கூறினார்.