

வாஷிங்டன்: ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 அமெரிக்க டாலரிலிருந்து 119 டாலர் வரை உயர்ந்தது. இதை குறைக்கும் முயற்சியாக ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறும்போது, ‘‘ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடை ஒரு மாத காலம் நீக்கப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கை. இதன்மூலம் 140 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் ஈரான் விற்க முடியும்.
இது ஈரான் ஏற்கெனவே விற்பனைக்காக கப்பலில் ஏற்றி வைத்துள்ள கச்சா எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும். புதிதாக வாங்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ அனுமதிக்க வில்லை. இந்த தடை நீக்கம் ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படுத்திய தற்காலிக அழுத்தத்தை குறைக்க உதவும்’’ என்றார்.
இதனால் ஈரான் விற்கும் கச்சா எண்ணெயை சீனா குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அரசு கூறுகையில், ‘‘தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கச்சா எண்ணெயோ உபரி எண்ணெய் கையிருப்போ இல்லை’’ என தெரிவித்துள்ளது.
தாக்குதல் அதிகரிக்கும்: ஈரான் மீதான தாக்குதலை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார். அதேநேரம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, ‘‘ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேல் படைகளின் தாக்குதல் இந்த வாரம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்’’ என்றார்.