

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
கான்பெரா: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு மிகச் சிறந்த வாய்ப்பு என ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று பேசியதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, அடுத்த பத்தாண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நம்முடைய இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு மிகச் சிறந்த வாய்ப்பு.
2022-ல் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் இருநாட்டு உறவை மேம்படுத்தியுள்ளது. கலாச்சாரம், கல்வி மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் மேலும் நெருக்கமடைந்துள்ளன. 1991-ல் ஒரு சாதாரண பயணியாக இந்தியாவுக்கு நான் சென்றதை இப்போது நினைவு கூர்கிறேன். இந்திய மக்களின் அன்பை நேரடியாகக் காண்பது ஒரு அற்புதமான அனுபவம். அதேபோல், பிரதமர் மோடியை விரைவில் இங்கு வரவேற்பதற்கான பாக்கியத்தை நான் பெறுவேன்.
இந்த பாக்கியத்தை 2-வது முறையாக மீண்டும் பெறுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 10 லட்சம் இந்திய வம்சாவளியினரால் பிரதமர் மோடியின் இந்த வருகை மிகவும் சிறப்பானதாக மாறும். இந்தியச் சமூகம் எங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. உங்களுக்காக எங்கள் அரசு எப்போதும் துணையாக நிற்கும். இவ்வாறு அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.
முன்னதாக, குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.