

புதுடெல்லி: விமானம் ரத்து காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பயணச்சீட்டு கட்டணத்தையும் தாமதமின்றி திருப்பி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட அல்லது தடை ஏற்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத் தொகையை பயணிகளுக்கு திருப்பி வழங்கும் நடைமுறையை நாளை (டிச.7) இரவு 8:00 மணிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டணத்தை திருப்பி வழங்கும் நடைமுறையில் ஏதேனும் தாமதம் அல்லது விதிகளுக்கு உட்படாத நிலை ஏற்பட்டால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறை தீர்க்கும் பணிகளை தடையற்ற வகையில் மேற்கொள்வதற்காக, இண்டிகோ நிறுவனம் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பிரத்யேக பிரிவுகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளைத் தொடர்பு கொள்ளவும், சிக்கல் இல்லாமல் அவர்கள் பணத்தைத் திரும்பப் பெறவும், மாற்று பயண ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்தப் பிரிவுகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக் காலத்தில் பயணிகளின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண கட்டணத்தில் உச்ச வரம்பு: இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்துக்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் உட்பட அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும்.
கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படாவிட்டால், பொது நலனைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் செயல்படும் இண்டிகோ விமான நிறுவனத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் விதிமுறைகள் தொடர்பான சிக்கல்களால் கடந்த சில நாட்களாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால், பயணிகளும் விமான நிலையங்களில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1000+ இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது