திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவை தொடங்க ஒப்புதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவை தொடங்க ஒப்புதல்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவை (Domestic Cargo) தொடங்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சிவில் விமானப் போக்கு வரத்து பாதுகாப்பு பணியகம் (BCAS- Bureau of Civil Aviation Security) ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி சர்வேதேச விமான நிலையத்தில் சர்வதேச நாடுகளுக்கான பிரத்யேக சரக்கு ஏற்றுமதி முனையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் திருச்சியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் இருந்து வேளாண் விளைபொருட்கள், பிரபல உணவு பண்டங்கள், வாகன உதிரிபாகங்கள், தொழில் நிறுவன தயாரிப்புகள் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், உள்நாட்டு சரக்கு சேவைக்கான பிரத்யேக இடம் ஒதுக்கப்படாமல் இருந்தது. எனவே, திருச்சியில் இருந்து உள்நாட்டு சரக்கு சேவைக்கு வழிவகை செய்ய வேண்டும் என தொழில் நிறுவனங்கள், வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.

இதன்பேரில், திருச்சியில் உள்நாட்டு சரக்கு சேவையைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் திருச்சி விமான நிலைய ஆணையம் வலியுறுத்தியது.

இதன்பேரில் வசதிகள் இருப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, தற்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய நிர்வாக அலுவலர்கள் கூறியது: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சர்வதேச சரக்கு ஏற்றுமதி முனையம் அருகே உள்நாட்டு சரக்கு சேவைக்கு இடம் ஒதுக்க ஜூலை 22-ம் தேதி அனுமதி கிடைத்துள்ளது.

எனவே, விரைவில் உள்நாட்டு சரக்கு ஏற்றுமதி சேவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் தொழில் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உள்நாட்டு சரக்கு சேவை தொடங்குவதன் மூலம் டெல்டா மற்றும் தென் மண்டலத்தின் ஜவுளி உற்பத்தி, டீ, மசாலாக்கள், பொறியியல் சார்ந்த உற்பத்திகள், உணவு பண்டங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உள்நாட்டு சந்தைகளுக்கு விரைவில் கொண்டு சேர்க்க முடியும்.

தற்போதைக்கு இண்டிகோ விமான நிறுவனம், தான் உள்நாட்டு சேவை வழங்கும் அனைத்து பகுதிகளுக்கும் உள்நாட்டு சரக்கு சேவை வழங்க உள்ளது.

மற்ற விமான நிறுவனங்கள் எந்தப் பகுதிக்கு உள்நாட்டு அனுமதி தேவை என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இதன்மூலம் தொழில் நிறுவனங்களுக்கு சாலை மார்க்கமாக மட்டுமின்றி இனி ஆகாய மார்க்கமாகவும் சேவை கிடைக்கும் என்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவை தொடங்க ஒப்புதல்
நடப்பு 2026-27 முதல் காலாண்டில் ரூ.82,000 கோடிக்கு இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in