

புதுடெல்லி: ரூ.41,863 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 22 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று கூறியுள்ளதாவது: டிக்சன், சாம்சங் டிஸ்பிளே, பாக்ஸ்கான், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் 22 மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.41,863 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களின் மூலம் 33,791 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும், இந்த 22 திட்டங்களின் மூலமாக ரூ.2,58,152 கோடிக்கு மின்னணு உதிரிபாக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் கடிதங்களை வழங்கினார்.
மின்னணு உதிரிபாக உற்பத்திக்கான இந்த ஒப்புதலில் மொபைல் உற்பத்தி, தொலைத்தொடர்பு, நுகர்வோர் மின்னணுவியல், பாதுகாப்பு மின்னணுவியல் உட்பட பல்வேறு துறைகளில் பயன்படும் 11 இலக்கு துறைப் பொருட்களின் உற்பத்தி அடங்கும்.