

கோப்புப்படம்
புதுடெல்லி: ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களின் கட்டுப்பாட்டு கருவியில், டேட்டா பாதிப்பு பிரச்சினை ஏற்படுவதால், மென்பொருளை மாற்றும்படி ஏர்பஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.
தீவிர சூரிய கதிரியக்கம் காரணமாக ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களின் கட்டுப்பாட்டு கருவியில் டேட்டா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மென்பொருளை மாற்றும்படியும், சில விமானங்களில் ஹா்ர்டுவேரை மாற்றியமைக்கும்படியும் ஏர்பஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. டேட்டா பாதிப்பு ஏற்பட்ட விமானங்களில் எலிவேட்டர் எலிரான் கம்ப்யூட்டரை (இஎல்ஏசி) பொருத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏ320 ஏர்பஸ் விமானங்களை தரையிறக்கி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதன் காரணமாக ஏர்பஸ் ஏ320 விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படலாம்.
560 ஏர்பஸ் விமானங்கள்: இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களிடம் சுமார் 560 ஏ320 ஏர்பஸ் விமானங்கள் உள்ளன. இவற்றில் 200 முதல் 250 விமானங்களில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது ஹார்டுவேர் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் இயக்கப்படும் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களிடம் ஏ320 ஏர்பஸ் ரக விமானங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவற்றின் விமான சேவைகளில் தாமதம் ஏற்படலாம் அல்லது விமான சேவைகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்சினையை சரிசெய்யும் பணியில் அனைத்து விமான நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.