

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டம் சாபாரில் ரூ.48,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள 3,200 மெகாவாட் அதானி பவர் அனல் மின் நிலையத்துக்கு அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அடிக்கல் நாட்டினார்.
அசாம் மாநிலத்தில் மின் பற்றாக்குறையைப் போக்கி ‘மின் உபரி மாநிலமாக’ மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிக்கல்’ தொழில்நுட்பத்துடன் நான்கு அலகுகளாக அமைக்கப்பட்டு டிசம்பர் 2030 முதல் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
சாபார் அனல் மின் திட்டமானது, அசாம் மாநிலத்தில் மின்சாரத் துறையில் அதானி குழுமத்தின் பெரிய அளவிலான ரூ.63,000 கோடி முதலீட்டுத் திட்டத்தின் முக்கியப் பகுதியாகும். இந்த மின் நிலையம் 2030-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக இயக்கத்துக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இத்திட்டம், அசாமின் மிகப்பெரிய தனியார் முதலீடுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.