

ஈரோடு: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், சொத்துவரி வசூலிப்பில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பிடித்துள்ளது. சேலம் மாநகராட்சி 20-வது இடத்தில் உள்ளது.
தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 20 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி வரி வருவாயில் சொத்துவரி முக்கியப் பங்கு வகிக்கிறது. சொத்துவரி வருவாய் வசூலிப்பை அதிகரிப்பதன் மூலம் மாநகராட்சியின் நிர்வாக செலவுகளை தடையின்றி மேற்கொள்வதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.
இந்நிலையில், கடந்த 2022- 23-ம் ஆண்டில் மாநகராட்சிகளின் சொத்து வரி வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இதில், நிலுவை மற்றும் நடப்பு ஆண்டுக்கான வரி வசூலில் 82.46 சதவீதம் பெற்று கோவை முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாமிடத்தை காஞ்சிபுரமும், மூன்றாமிடத்தை ஈரோடும் பிடித்துள்ளன.
ஈரோட்டில், மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 58 பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதில், நிலுவை வரியாக ரூ. 6.35 கோடியும், கடந்த ஆண்டு சொத்துவரியாக ரூ. 46.97 கோடியும் என மொத்தம் ரூ 53.33 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டில் நிலுவை சொத்து வரியில், ரூ.3.25 கோடியும், கடந்த ஆண்டுக்கான வரியில் ரூ.40.13 கோடியும் என மொத்தம் ரூ.43.38 கோடியை ஈரோடு மாநகராட்சி வசூலித்துள்ளது. இம்மாநகராட்சியில் தற்போது ரூ.9.95 கோடி நிலுவை சொத்து வரி உள்ளது. நிலுவை மற்றும் கடந்தாண்டு சொத்துவரி வசூலிப்பில், 81.35 சதவீத வரிவசூலை மேற்கொண்டதன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கடைசி இடத்தில் சேலம்: இப்பட்டியலில் ஓசூர் மாநகராட்சி ரூ.30.56 கோடி சொத்துவரி வசூல் செய்ததன் மூலம், 69.48 சதவீத வரிவசூல் செய்து 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் நிலுவை மற்றும் கடந்த ஆண்டு சொத்து வரியாக மொத்தம் ரூ.113.27 கோடி வசூலிக்க வேண்டி இருந்தது. இதில், ரூ.66.62 கோடி மட்டும் வசூலான நிலையில், 58.81 சதவீதம் பெற்று 20-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது.