

அகமதாபாத்: அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி வரவேற்றுள்ளார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் தனது சொத்து மதிப்பில் சரிவை கண்டார் அதானி.
இந்தச் சூழலில் அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. | வாசிக்க > அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் | விசாரணை நடத்த 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்
“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதானி குழுமம் வரவேற்கிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும். வாய்மையே வெல்லும்” என அதானி ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, ஹிண்டன்பர்க் அறிக்கையை திட்டவட்டமாக மறுத்திருந்தார் அதானி. ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு சொல்லி 413 பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தது.