

புதுடெல்லி: கடந்த 2019-20 நிதி ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக சேவையில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் நிதித் திரட்டும் வகையில் ‘சமூகப் பங்குபரிவர்த்தனை’ திட்டத்தை முன்வைத்தார்.
இதன்படி, லாப நோக்கற்றசமூக சேவை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலாக முடியும். இதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சமூகப் பங்கு பரிவர்த்தனை தொடர்பான விதிகளை கடந்த ஆண்டு வெளியிட்டது.
இந்நிலையில், தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) நிறுவனம் அதன்தளத்தில், சமூக பங்கு பரிவர்த்தனைக்கென்று தனிப் பிரிவை அறிமுகம் செய்ய செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் தனிப்பிரிவில் தன்னார்வதொண்டு நிறுவனங்கள், லாபநோக்கற்ற நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் அந்நிறுவனங்கள் நிதி திரட்டுவது எளிமையாகும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் கூறுகையில், “சமூக பங்குப் பரிவர்த்தனைப் பிரிவை அறிமுகப்படுத்த என்எஸ்இ-க்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், சமூக சேவை நிறுவனங்களிடம் இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
செபியின் வரையறைக்கு உட்பட்ட சமூக சேவை நிறுவனங்களே சமூகப் பங்கு பரிவர்த்தனை பிரிவில் பதிவு செய்துகொள்ள முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள், அரசியல் மற்றும் மத நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை இப்பிரிவில் இடம்பெற முடியாது.
3 ஆண்டு தடை: விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, கேபிடல் வொர்த் நிறுவனத்துக்கு பங்குச் சந்தையில் செயல்பட செபி 3 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்களும் 3 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தைசெயல்பாட்டில் ஈடுபட முடியாது என்று செபி குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற ரூ.1.54 கோடியை மூன்று மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேபிடல் வொர்த் நிறுவனம் உரிய சான்றிதழ் பெறாமல், பங்கு முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்துள்ளது. இதன் காரணமாக தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.