Published : 05 Feb 2023 04:05 AM
Last Updated : 05 Feb 2023 04:05 AM
சென்னை: தங்கத்தின் விலை 2-வது நாளாக நேற்றும் குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.640 குறைந்து ரூ.42,680-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. பின்னர், விலை சற்று குறைந்தது. இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040 என்ற அளவில் புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440-க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520-க்கும் விற்பனையானது. நேற்று 2-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680-க்கும் விற்பனையானது.
கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது. இது குறித்து தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘பட்ஜெட்டில் இறக்குமதி தங்கத்துக்கான வரி உயர்த்தப்பட்டதையடுத்து விலை திடீரென உயர்ந்தது. பட்ஜெட் எதிரொலியாக தங்கத்துக்கு ஒரு செயற்கையான தேவை உருவானது.
இதனால், விலை அதிகரித்தது. தற்போது, சந்தை ஸ்திரத்தன்மை நிலையை எட்டியுள்ளதால் தங்கம் விலை இறங்கத் தொடங்கி உள்ளது. இந்த விலை இறக்கம் தற்காலி கமானதுதான். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்த பலர்தற்போது தங்கத்தில் அதிகம்முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். எனவே, தங்கம் விலை மிக அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரம் வரை செல்ல வாய்ப்புள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT