

# நாட்டின் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் உலகளவில் 10-வது பெரிய நாடாக இருந்த இந்தியா தற்போது 5-வது பெரிய நாடாக உள்ளது.
# கடந்த 9 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
# வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரித்து 27 கோடியாக உயர்ந்துள்ளது. 2022-ம் ஆண்டு யுபிஐ வழியாக 7,400 கோடி டிஜிட்டல் பணம் செலுத்துதல் மூலம் ரூ.126 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
# தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.7 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
# உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 102 கோடி பேருக்கு 220 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
# பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்குகள் 47.8 கோடி பேருக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
# பிரதமரின் சுரக்ஷா பீமா மற்றும் பிரதமரின் ஜீவன் ஜோதி திட்டத்தின் கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
# பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 11.4 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2.2 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.
# நோயற்ற, தரமான தோட்டக்கலை பயிர்கள் கிடைப்பதை ஊக்குவிக்க ரூ.2,200 கோடி மதிப்பில் தற்சார்பு சுத்தமான தாவர திட்டம் தொடங்கப்படவுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட 157 மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் 740 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களை மத்திய அரசு தேர்வு செய்யவுள்ளது.
# பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
# ரயில்வேத் துறை முதலீட்டுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2013-14-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 9 மடங்கு அதிகம்.
# புதிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு 5ஜி சேவை அடிப்படையிலான வசதிகளுக்கு 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
# இரண்டாம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் நகர்ப்புற கட்டமைப்புகளை ஏற்படுத்த நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (யுஐடிஎப்) ஏற்படுத்தப்படும். இது தேசிய வீட்டு வசதி வங்கி மூலம் நிர்வகிக்கப்படும்.
# குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆவணங்களை ஆன்லைன் மூலம் பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள நிறுவன டிஜிலாக்கள் ஏற்படுத்தப்படும்.
# சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் கோபர்தன் திட்டத்தின் கீழ் கழிவுகளையும் பணமாக்கும் 500 புதிய ஆலைகள் ஏற்படுத்தப்படும்.
# இயற்கை விவசாய முறைகளை பின்பற்ற அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவவுள்ளது. இதற்காக 10,000 பயோ வள மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மைக்ரோ உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் விநியோகிக்கப்படும்.
# இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டம் 4.0 தொடங்கப்படும். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், மெக்காட்ரானிக்ஸ், 3டி பிரின்டிங், ட்ரோன்கள் உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்படும்.
# சர்வதேச வாய்ப்புகளுக்காக இளைஞர்களின் திறனை மேம்படுத்த பல மாநிலங்களில் 30 ‘ஸ்கில் இந்தியா இன்டர்நேஷனல்’ மையங்கள் ஏற்படுத்தப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட கடன் உத்திரவாத திட்டத்துக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இத்திட்டம் அடமானம் இல்லாமல் கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன் பெற வழிவகுக்கும் மற்றும் கடன் செலவையும் சுமார் 1 சதவீதம் குறைக்கும்.
# மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
# ஊரக பகுதிகளில் இளம் தொழில் முனை
வோர்கள் வேளாண் தொழிலை ஊக்குவிக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி ஏற்படுத்தப்படும்.
# இந்தியாவை ‘ஸ்ரீ அன்னா’ என்ற பெயரில் உலகளாவிய மையமாக மாற்ற ஹை தராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம், சீர்மிகு மையமாக மாற்றப்படும். இதன் மூலம் சிறந்த நடைமுறைகள், ஆராய்ச்சிகள், தொழில்
நுட்பங்கள் சர்வதேச அளவில் பகிரப்படும்.
# விவசாயம், கால்நடைவளர்ப்பு, பால் மற்றும் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
# மீனவர்களின் தொழிலை ஊக்குவிக்க ரூ.6,000 கோடி மதிப்பில் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் புதிய துணைத் திட்டம் தொடங்கப்படும்.
# ரூ.2,516 கோடி முதலீட்டில் 63,000 ஆரம்ப வேளாண் கடன் சொசைட்டிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
# வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க மூலதன செலவுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இது 3-வது ஆண்டாக 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
# பழங்குடியினரின் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.15,000 கோடி.
# துறைமுகங்கள், நிலக்கரி, எஃகு, உரம் மற்றும் உணவு தானிய துறைகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை ஏற்படுத்த தனியார் நிறுவனங்களின் ரூ.15,000 கோடி உட்பட ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும்.
# மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையங்கள், சீர்மிகு ஆசிரியர் பயிற்சி மையங்களாக மேம்படுத்தப்படும்.
# குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தரமான புத்தகங்கள் கிடைக்க தேசிய டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்படும்.
# நுண்நீர் பாசன திட்டம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்த அப்பர் பத்ரா திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.5,300 கோடி நிதியுதவி அளிக்கும். கட்டமைப்புகளுக்கான முதலீட்டை ஊக்குவிக்க மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு தொடரும்.
# கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றுவது 100 சதவீதம் இயந்திரமயமாக்கப்படும்.
# இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கவும், இந்தியாவுக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்கவும் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 சீர்மிகு நுண்ணறிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
# தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளமாக பயன்படுத்தப்படும்.
# நீதித்துறையின் சிறப்பான நிர்வாகத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 3-ம் கட்ட இ-நீதிமன்றங்கள் திட்டம் தொடங்கப்படும்.
# விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை நினைவு கூறும் வகையில் பெண்கள் பெயரில் புதிய சிறு சேமிப்பு திட்டம் ‘மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ளது. இதில் ரூ.2 லட்சம் வரை 2 ஆண்டு காலத்துக்கு டெபாசிட் செய்ய முடியும். இதில் 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். இதில் ஒரு பகுதி பணத்தை எடுத்து கொள்ளும் வசதியும் உண்டு.
| வார்த்தை மாறியதால் சிரிப்பலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசித்தபோது, மத்திய அரசு துறைகளில் பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவிகளை வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார். அப்போது, ஓல்டு பொலூட்டட் வெஹிகிள்ஸ் (old polluted vehicles) என்று கூறுவதற்குப் பதிலாக ஓல்டு பொலிடிக்கல் வெஹிகிள்ஸ் (old political vehicles) என்று தவறுதலாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமைச்சர், மன்னிப்பு கோரி விட்டு பட்ஜெட் வாசிப்பை தொடர்ந்தார். |