

புதுடெல்லி: பழைய வருமான வரி முறையைவிட, புதிய வருமான வரி முறை கவர்ச்சிகரமானது என்றும், அதிக தள்ளுபடி அளிக்கக் கூடியது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு: நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது, சுற்றுலா மேம்பாடு, கைவினைக் கலைஞர்களுக்கான திட்டங்கள், பசுமை வளர்ச்சி ஆகிய 4 முக்கிய விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
புதிய வருமான வரி விதிப்பு முறை கவர்ச்சிகரமானதாகவும், சலுகைகள் நிறைந்ததாகவும் மாறி இருக்கிறது. எனவே, பழைய வருமான வரி முறையில் இருப்பவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி புதிய வருமான வரி முறைக்கு மாற முடியும். அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், புதிய வருமான வரி முறை சிறந்தது என கூறுகிறோம். நேரடியாக வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதன் காரணமாகவே 2-3 ஆண்டுகளாக புதிய வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இதற்கு அதிக ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. இந்த புதிய முறை எளிமையானது, குறைவான வரி விகிதம் கொண்டது. அதேநேரத்தில் பழைய வரி விதிப்பு முறையும் அமலில் இருக்கும்.
தொழில்நுட்பத்துடன் இணைந்த பொருளாதாரம்: தொழில்நுட்பத்துடன் இணைந்த பொருளாதாரத் துறைதான் எதிர்காலத்திற்கானது என்பதால், அதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொழில்புரட்சி 4.O-க்குத் தேவையான பயிற்சி மக்களுக்கு அளிக்கப்படும். டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
வேளாண் ஊக்குவிப்பு: வேளாண் தொழிலுக்கு கடன் அளிப்பது அதிகரித்துள்ளது. வேளாண் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடி கடன் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மீனவர்களும் பயன்பெற முடியும். மூலதன முதலீடு மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறு - குறு - நடுத்தர தொழில்நிறுவனங்கள் அதிக பலனடைய முடியும். மூலதன முதலீட்டை உயர்த்துவதன் மூலம் தனியார்துறையும் வளர்ச்சி காணும்; வேலைவாய்ப்பு பெருகும்.
5 டிரில்லியன் பொருளாதாரம்: நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். பணவீக்கம் குறைந்துள்ளது. பொருட்களின் விலை உயர்வதாக இருந்தால் உடனடியாக நாங்கள் செயலில் இறங்கி, அவற்றின் விலையை கட்டுக்குள் கொண்டு வருகிறோம்.
கோதுமையின் விலையை குறைக்கும் நோக்கில் பொது சந்தைக்கு கோதுமையை விடுவிக்க நாங்கள் முடிவெடுத்தோம். அதன்படி, கோதுமை பொதுச் சந்தைக்கு விடப்பட்டு அதன் விலை குறைக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு முன்பாகவே, கோதுமை விலை குறைக்கப்பட்டுவிட்டது'' என்று தெரிவித்தார்.