

தாகா: உக்ரைன் - ரஷ்யா போரால் கடந்த மே மாதம் முதல் இதுவரை டாலருக்கு நிகரான வங்கதேச கரன்சி மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சாரம் வாங்க பணம் செலுத்த முடியாததால் தினமும் 13 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது.
பணவீக்கம் 8.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலை யில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதியுதவி வழங்குமாறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஏற்று வங்கதேசத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஒப்புக் கொண்டுள்ளது. .
இதன்படி, வங்கதேசத்துக்கு முதல்கட்டமாக ரூ.3,800 கோடி கடன் வழங்கப்படும். கடன் தொகையைக் கொண்டு அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.3.77 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.95 லட்சம் கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தைப் போலவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இலங்கை அரசுகளும் கடன் வழங்குமாறு ஐஎமஎப் அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தக் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.