

புதுடெல்லி: மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டில் அதிக லாபத்தை பதிவு செய்த பொதுத் துறை நிறுவனங்களின் பட்டியலில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பவர்கிரிட், என்டிபிசி, செயில் ஆகியன முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) ஒட்டுமொத்த நிகர லாபம் 50.87 சதவீதம் உயர்ந்து ரூ.2.49 லட்சம் கோடியைத் தொட் டுள்ளது.
அதிக நஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்களாக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்ஸ், ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் மற்றும் அலையன்ஸ் ஏர் ஏவியேஷன் ஆகியவை உள்ளன.
சிபிஎஸ்இ நிறுவனங்களின் மொத்த செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.24.08 லட்சம் கோடியிலிருந்து 32.65 சதவீதம் உயர்ந்து ரூ.31.95 லட்சம் கோடியை எட்டியது. பொதுத்துறை நிறுவனங்கள் அறிவித்த டிவிடெண்ட் 57.58 சதவீதம் உயர்ந்து ரூ.1.15 லட்சம் கோடியைத் தொட்டது. சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு (சிஎஸ்ஆர்) பொதுத் துறை நிறுவனங்கள் செலவிட்ட தொகை கடந்த 2021-22-ல் 2.61 சதவீதம் உயர்ந்து ரூ.4,600 கோடியானது. சிஎஸ்ஆர் பங்களிப்பில் ஓஎன்ஜிசி, என்டிபிசி, இந்தியன் ஆயில், என்எம்டிசி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.