

ஓசூர்: கடந்த இரு ஆண்டுகளுக்கு பின்னர் தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள நாற்றுப் பண்ணைகளில் ரோஜா நாற்றுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமைக்குடில் மூலம் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, திறந்தவெளி வயல்களில் பன்னீர் மற்றும் பட்டன் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான ரோஜா சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
20 கிராமங்களில் நர்சரி: இதற்காக ஓசூர் அருகே பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அகலக்கோட்டை, பாலதோட்டனப்பள்ளி, மரகத தொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களில் நாற்றுப் பண்ணைகள் அமைத்து ரோஜா செடி நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இங்கு சென்ட் ரோஜா எனப்படும் பன்னீர் ரோஜாக்கள், பட்டன், கில்லி எல்லோ, மூக்குத்தி, மேங்கோ எல்லோ, நோப்ளஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா ஊரடங்கின்போது, திறந்தவெளியில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பலர் பெரும் வருவாய் இழப்பை சந்தித்ததால், தோட்டத்தில் செடிகளை அழித்தனர். இதனால் மலர் செடி நாற்றுகளின் விற்பனையும் வெகுவாக சரிந்தது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால், மீண்டும் மலர் தோட்டங்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மலர் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு; இது தொடர்பாக நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு முன்பு பன்னீர், பட்டன் ரோஜா சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஊரடங்கின் போது, மலர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், செடி களை பராமரிக்க முடியாமல், செடி களை விவசாயிகள் அழித்தனர்.
கடந்த சில மாதங்களாக உள்ளூரில் மலர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால், எதிர்வரும் திருமணம், கோயில் திருவிழாக்களுக்கு மலர்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.15-க்கு விற்பனை: மேலும், கடந்த காலங்களைப்போல வெளி மாநில, மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகள் பலர் மீண்டும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாற்றுப் பண்ணை களில் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு நாற்று ரூ.15 முதல் ரூ.20 வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.