

புதுடெல்லி: வருடத்தின் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு சென்னையில் ரூ.1,917க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றத்தால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் போன்றவை உணவுப் பொருட்கள், தேநீர் விலையை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த 2022 மே 19-ம் தேதிக்கு பின்னர் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டே வந்தது. அதே சமயம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டுவந்தது.
இந்நிலையில், 2023ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி மாதத்துக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில், வர்த்தக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் விலை ரூ. 25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றத்திற்குப் பின்னர் டெல்லியில் இந்த சிலிண்டர் ரூ.1,769க்கும், மும்பையில் ரூ.1,870க்கும், கொல்கத்தாவில் ரூ.1,971க்கும், சென்னையில் ரூ.1,917க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.