

புதுடெல்லி: சரக்குப் போக்குவரத்து மூலமாக இந்திய ரயில்வே துறைக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.08 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் டிசம்பர் 6-ம் தேதி வரையில் ரயில்வே துறைக்கு சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.93,532 கோடி வருவாய் கிடைத்தது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் 6 வரையில் 1002 மில்லியன் டன் அளவில் இந்திய ரயில்வே சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது. சென்ற நிதி ஆண்டில் அது 926 மில்லியன் டன்னாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் ரயில்களில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளில் 48 சதவீதம் நிலக்கரி ஆகும். இதுவரையில் 485 மில்லியன் டன் நிலக்கரி ஏற்றிச் செல்லப்பட்டிருக்கிறது. சென்ற நிதி ஆண்டில் அது 425 மில்லியன் டன்னாக இருந்தது.
கல், சாம்பல், பாக்சைட், உலோகப் பொருள்கள், வாகனங்கள், ஜிப்சம் உப்பு ஆகியவை நடப்பு நிதி ஆண்டில் 83 மில்லியன் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், சிமெண்ட் 8 சதவீதமும், உரங்கள் 14 சதவீதமும் கூடுதலாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன.