

நமது ‘இந்து தமிழ் திசை’ பல்வேறு துறைகள் சார்ந்த பயனுறு நிகழ்வுகளை நம் வாசகர்களுக்காக ஊர்கள் தோறும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்’ வணிக அமைப்புடன் இணைந்து ‘முதலீடு தரும் முன்னேற்றம்’ என்ற வணிகம் சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சியை புதுச்சேரியில் உள்ள அதிதி ஹோட்டலில் நேற்று மாலை நடத்தியது.
இந்நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது பற்றியும், அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவன தமிழ்நாடு ரீஜினல் தலைமை அலுவலர் சுவாமிநாதன் கருணாநிதி கலந்து கொண்டு பேசியது:
சேமிப்பும், முதலீடும் ஒன்றல்ல; இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு மெதுவாக வளரும். முதலீடுகளில் சில ஆபத்துகள் நிறைந்தவையாக இருக்கும். ஆனால் அதன் வளர்ச்சி அதிகம்.
உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபட் தன்னுடைய 80 ஆண்டுகளையும் தாண்டிய முதலீடு அனுபவத்தில் சொல்வது, ‘நாளை மார்க்கெட் எங்கு செல்லும் என்று தெரியாது. ஆனால் நான் போட்டுள்ள முதலீடு நல்ல முதலீடு. வருங்காலத்தில் அது நன்மையைத் தரும் என்பது எனக்கு தெரியும்’ என்பது தான். அவரது கூற்று முற்றிலும் உண்மையானது.
கடந்த 6 மாதங்களில் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை தாண்டி, நம்முடைய வரவு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதனை நாம் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்கு முதலீடு அவசியம்.
கார், வீடு உள்ளிட்டவை வாங்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். ஆனால் நம்முடைய தேவைகளை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. அப்படியே நாம் தட்டுத்தடுமாறி அவைகளை அடைந்தாலும், அதைத் தக்க வைக்க இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும் தற்போது செய்து கொண்டிருப்பதையே செய்ய வேண்டும்.
அப்படி இல்லாமல் தனியாக அமர்ந்து திட்டமிட்டால், பணவீக்கத்தை தாண்டிச் செல்வது எப்படி என்பதை கண்டுபிடிக்கலாம். முதலீட்டின் தாரக மந்திரமே பணவீக்கத்தை கடந்து போவது தான்.
ஒரு மால், ஷாப்பிங் காப்பிளக்ஸ் சென்றால் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். அதே போன்றது தான் மியூச்சுவல் ஃபண்ட்ஸ். ஒரு நாள் முதலீட்டில் இருந்து 50 ஆண்டுகள் வரை மியூச்சுவல் ஃபண்ட்ஸ்சில் முதலீடு செய்ய முடியும். பலதரப்பட்ட முதலீடுகளை ஒரே இடத்தில் கொடுப்பது தான் மியூச்சுவல் ஃபண்ட்ஸ். எளிமையானது, எல்லோருக்கும் ஏற்றது. பிரித்து முதலீடு செய்வதால் பலதரப்பட்ட நன்மைகள் வர இதில் வாய்ப்புள்ளது.
நீங்கள் முதலீடு செய்யும் பணம் எங்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். ஃபண்ட்ஸ் மேலாளர் முடிவு செய்வதில்லை. முதலீட்டை பொறுத்தவரையில் சரியான முடிவெடுத்து முதலீடு செய்தால் நன்மை கிடைக்கும்.
எதற்காக முதலீடு செய்தோம், என்ன நோக்கத்துக்காக செய்தோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பணம் வளர வேண்டும். ஆனால் அது எவ்வளவு நாட்கள் வரை இருக்க வேண்டும் என்றுள்ளது. குறுகிய காலத்தில் நம்முடைய எதிர்பார்ப்பை அடைய முடியாது. நீண்டகால முதலீட்டால்தான் அடைய முடியும். சரியான குறிக்கோளுடன் முதலீடு செய்தால் நம்முடைய இலக்கை அடையலாம் என்று தெரிவித்தார்.
தன்னம்பிக்கை உரையாளரும் எழுத்தாளருமான ராம்குமார் சிங்காரம் பேசியதாவது: உத்திகள், போருக்கு மட்டுமல்ல; வாழ்க்கை, முன்னேற்றம், நிதி விஷயத்திலும் உத்திகள் தேவை. ‘எனது வேலை பாதுகாப்பானது - பணம் வருவதால் இன்று செலவழிக்கலாம்; நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைக்கிறனர். யதார்த்த நிலை அப்படியில்லை.
2010-ல் இருந்த பல வேலைகள், தொழில்கள் இப்போது இல்லை. கண்ணுக்கு முன்னே பல காணாமல் போய் கொண்டிருக்கின்றன. டெலிபோன் ஆப்ரேட்டர், ரிசப்சனிஸ்ட், ஸ்டெனோகிராபர், டிடிபி ஆப்ரேட்டர் என பல வேலைகள் காணாமல் போய் விட்டன. கணினி கண்காணிப்பு இயந்திரங்கள், ரோபாட்டுகள் வந்து விட்டன. இப்போது இருப்பது நல்ல வேலை, தொழில் என்றாலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதில் வருமானம் வருமா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
நிதர்சனமற்ற தொழில், வேலை இருப்பதால் அதிக சேமிப்பும் முதலீடும் மிக அவசியம். சேமிப்பு மற்றும் முதலீடுதான் நம்மைக் காப்பாற்றும். நம் சந்ததியைக் காப்பாற்றும். விசாரித்து முதலீடு செய்வது மிக அவசியம். முடிந்தவரை சம்பாதிக்கவும். நிறைய சேமிக்கவும். செலழிக்கும் பணத்தில் குறைவான ஃபண்ட்ஸ் மதிப்பில் வாங்கி சேமியுங்கள். நாம் செய்வதை பார்த்து நம் குழந்தைகளுக்கும் இந்த சேமிப்பு பழக்கம் வரும்.
பணத்தைப் பெருக்கத் தெரிந்தவர்கள் சேமிக்கிறார்கள். பண நெருக்கடியால் வாழ்வை சுருக்க வேண்டாம். சிறப்பாக வாழ பணம் முக்கியம். வாழ்க்கை ஒரு முறைதான். பல முதலிட்டாளர்களின் கண்கள் இந்தியாவை நோக்கி தற்போது இருக்கிறது. மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. நமது நாட்டுக்கான மிகசிறந்த காலக்கட்டம் இது. வருமானத்தை பெருக்கி சேமித்தால் வாழ்க்கை வளமாக அமையும் என்று தெரிவித்தார்.
முதலீட்டின் சில முக்கிய சூட்சமங்கள்
இந்த வழிகாட்டுதல் நிகழ்வில், ஆதித்யா பிர்லா மண்டல மேலாளர் ராஜேந்திர பென்டி மற்றும் மியூட்சுவல் பண்ட் டிஸ்டிரியூப்யூடர் அரவிந்த் ஜெயகோபால் ஆகியோர் நம் வாசகர்களுடன் கலந்துரையாடினர். அதன் முக்கிய அம்சங்கள்:
1) முதலீட்டுக்கு மூன்று இலக்குகள் முக்கியம். 1) ஒழுக்கம், 2) பொறுமை, 3) கவனம்.
2) மியூட்சுவல் ஃபண்டில் ரிஸ்க்கை (அபாயம்) தவிர்க்க முடியாது; ஆனால் சமாளித்து விடலாம்.
3) மியூச்சுவல் ஃபண்ட்டில் தங்கம், ரியல் எஸ்டேட் என பல பிரிவுகளில் பதிவு செய்யலாம்.
4) குழந்தைகளுக்கான பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தேவையை கணக்கிட்டு, மாத முதலீட்டை முடிவு செய்யலாம்.
5) முதலில் குறைவாக தொடங்கி, நிதி சூழலுக்கு ஏற்ப செலுத்தும் தொகையை அதிகரித்து கொள்ளும் வசதி உள்ளது.
6) முதலீடு தொடங்கினால் மட்டும் போதாது. அதில் நமது வாரிசுதாரர் பெயர், மொபைல் எண், இமெயில், முகவரி, வங்கிக்கணக்கு எண் உள்ளதா என்பதை கேஒய்சியில் சரிபார்ப்பது அவசியம்.
7) வருமானவரி செலுத்தும் விவரத்தில் உள்ள பெயரும் முதலீட்டில் உள்ள பெயரும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிக அவசியம்.
8) முதலீடு சந்தை ரோலர் ஸ்கேட்டிங் போல் மேலும் கீழும் செல்லும். பொறுமையாக இருந்தால்தான் வளத்தைப் பெருக்க முடியும்.
9) நிதி முதலீட்டு தளத்தை அடிக்கடி மாற்றக்கூடாது. இதனால் நிதி வளம் அதிகரிப்பு குறைந்து விடும்.
இந்நிகழ்ச்சியை இந்து தமிழ் திசையின் உதவி பொது மேலாளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்றும் விற்பனைப் பிரிவு) மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.