

அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 540 சதவீதம் உயரும் என மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் இந்த தலைமுறை இளைஞர்கள் 28 சதவீதம் இருக்கின்றனர். வரும் ஆண்டுகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை இவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். அதனால் ஆன்லைன் விற்பனை யில் வளர்ச்சி ஏற்படும் என்று மார்கன் ஸ்டான்லி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இணையதளம் எல்லா இடங்களிலும் சென்று சேர்ந்திருப்பது மற்றும் ஆன்லைன் சேவைகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது போன்றவற்றால் விற்பனை உயரும் என்று நம்புவதாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
இந்த தலைமுறை இளைஞர் களில் சராசரி தனிநபர் வருமானம் 2,400 டாலராக உள்ளது. 45 வயதுக்கு மேலானாவர்களின் சராசரி தனிநபர் வருமானம் 2015-ம் ஆண்டில் 2,150 டாலராக மட்டுமே உள்ளது.
``இளைஞர்கள் தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு மிகப் பெரிய வாய்ப்புகள் தற் போது இருக்கின்றன. இவர்கள் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு இந்த தொழில்நுட்ப வசதிகள் போய் சேரும். மேலும் தற்போது இளைஞர்கள் ஆன்லைன் மூல மாக பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச அளவில் இ-காமர்ஸ் துறையில் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உருவாகும் என்று எதிர்பார்க்கி றோம். ஆண்டுக்கு 10 கோடி ஸ்மார் ட்போன்கள் ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. முதன் முதலில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்கள்தான் இந்த 10 கோடி போன்களை வாங்கியவர்கள். அப்படியென் றால் 10 கோடி வாடிக்கையாளர்கள் தற்போது புதிதாக சேர்ந்துள்ளனர். 2015-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் 33 சதவீதம் பேர் அதாவது 40 கோடி மக்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 2020-ம் ஆண்டில் இது 79 கோடியாக உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேபோல் தற்போது ஆன்லைன் மூலமாக 5 கோடி பேர் பொருட்கள் வாங்குகின்றனர். இது 2020-ம் ஆண்டில் 32 கோடியாக உயரும். இந்த வளர்ச்சிக்கு புதிதாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் காரணமாக இருப்பார்கள்’’ என்று மார்கன் ஸ்டான்லி இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பம், இணையதள பிரிவின் நிர்வாக இயக்குநர் பாரக் குப்தா தெரிவித்தார்.