

புதுடெல்லி: நடப்பாண்டில் நாட்டின் நிகர நேரடி வரி வசூல் இதுவரை ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
நடப்பாண்டில் நேற்று முன்தினம் நிலவரப்படி நாட்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ.7,00,669 கோடியை எட்டியுள்ளது. இது, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வரையில் வசூலான ரூ.5,68,147 கோடியுடன் ஒப்பிடும்போது 23.33 சதவீதம் அதிகமாகும்.
மொத்த வரி வசூலில் கார்ப்பரேட் வரிகளின் பங்களிப்பு ஏறக்குறைய பாதி அளவுக்கு, அதாவது ரூ.3,68,484 கோடியாக இருந்தது. இதுதவிர, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கு பரிவர்த்தனை வரி வசூல் ரூ.3.3 லட்சம் கோடியாக இருந்தது.
நாட்டின் நேரடி வரி வசூல் தொடர்ந்து சிறப்பாகவும், வலுவான நிலையிலும் இருந்து வருகிறது. கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
வரி வசூல் உயர காரணம் என்ன?
மத்திய அரசின் நிலையான கொள்கை, தொழில்நுட்பத்தை திறமையாகக் கையாண்டு வரி ஏய்ப்புகளைத் தடுத்தது, சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகியவை வரி வசூல் உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும்.
கடந்த 2021-22-ம் ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மொத்த நேரடி வரி வருவாய் 30.2 சதவீதம் உயர்ந்து, ரூ.8,36,225 கோடியைத் தொட்டுள்ளது. இதில், நிறுவன வரி ரூ.4.36 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி (பங்கு பரிவர்த்தனை வரி உள்பட) ரூ.3,98,440 கோடியாகவும் உள்ளது. ஒட்டுமொத்த வரி வசூலில் டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம் ரூ.4.34 லட்சம் கோடியாகவும், சுய மதிப்பீட்டு வரியின் பங்களிப்பு ரூ.77,164 கோடியாகவும் இருந்தது.
கடந்த 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, முன்கூட்டி செலுத்தப்படும் வரி வசூல் 17 சதவீத வளர்ச்சியுடன், ரூ.2,95,308 கோடியைத் தொட்டுள்ளது. இதில், பெரு நிறுவன வரியின் பங்களிப்பு ரூ.2.29 லட்சம் கோடியாகும். தனிநபர் வருமான வரியின் பங்கு ரூ.66,176 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு (ஐடிஆர்) படிவங்களைப் பரிசீலிப்பதில் வேகமான நடை முறைகள் பின்பற்றப்பட்டன.
ரீஃபண்டு அதிகரிப்பு
கடந்த 17-ம் தேதி வரை 93 சதவீத ஐடிஆர் படிவங்கள் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், ரீஃபண்டுகளின் எண்ணிக்கை 468 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 17-ம் தேதி வரை வரி செலுத்தியோருக்கு திரும்ப அளிக்க வேண்டிய ரீஃபண்ட் தொகை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.74,140 கோடியிலிருந்து, ரூ.1,35,556 கோடியாக உயர்ந்துள்ளது. இது 83 சதவீத வளர்ச்சியாகும். இவ்வாறு நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.