10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடையும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து

10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடையும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து
Updated on
1 min read

அடுத்த 15 ஆண்டுகளுக்குள், 10,00,000 கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா திகழும் என நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கூட்டமைப்பான பிக்கி அமைப்பு நடத்திய சீனா-இந்தியா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய அரவிந்த் பனகாரியா இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியா தற்போது உள்ள 2 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தில் இருந்து அடுத்த 15 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவாகும். கடந்த 15 ஆண்டு களில் சீனா உருவானதை போன்று இந்தியாவின் பொருளாதாரம் உயரும். சீனாவை விட தாமதமாகவே இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் சீனா வளர்ச்சியடைந்ததை போன்று அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைவதற்கு ஆற்றல் உள்ளது. தற்போது இந்தியாவின் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா 10 லட்சம் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியடையும்.

கடந்த 15 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் பொருளாதாரம் 2,00,000 கோடி டாலராக இருந்தது. தற்போது 10,00,000 கோடி டாலராக வளர்ச்சியடைந்துள்ளது. வெளிநாடுகளில் முதலீடு செய்வதை சீனா ஆதரித்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இந்த இரண்டு ஒற்றுமைகளையும் பயன்படுத்தி இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி துறையில் சீனாவின் பங்களிப்பால் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பு உள்ளது. மந்தமாக உள்ள உலக பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவும் மிக அரிதான வெளிச்ச புள்ளிகள். வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்த போதிலும் சர்வதேச பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு 50,000 கோடி டாலராக உள்ளது. இவ்வாறு அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.

இந்தியாவை மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாக்குவதற்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு உரிய தொலைநோக்கு திட்டங்களை நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கி வருகிறது.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் தலைவர் ஸூ ஷாயோஷி பேசியதாவது: சீனாவும் இந்தியாவும் மிக வலிமையான நாடுகள். சர்வதேச அளவிலும் ஆசிய அளவிலும் இந்த இரண்டு நாடுகளும் அதிகார வலிமை கொண்ட நாடாக திகழ்ந்து வருகின்றன. இருநாட்டு உறவுகளை தாண்டி செயல்பட வேண்டிய தேவை இருநாடுகளுக்கும் உள்ளது. சர்வதேச அளவில் அனைவராலும் ஈர்க்கக்கூடிய வகையில் உருவாக இரண்டு நாடுகளுக்கும் ஆற்றல் உள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட மேலும் ஒருமித்த நடவடிக்கைகள் செயல்பாடுகள் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in