அதிரடி சலுகைகள்: கரூரில் கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண குறைப்புக்கு வரவேற்பு

அதிரடி சலுகைகள்: கரூரில் கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண குறைப்புக்கு வரவேற்பு
Updated on
1 min read

கரூர்: கரூரில் புதிது புதிதாக தொடங்கப்படும் கால் டாக்ஸி நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைத்திருப்பதாலும், சுங்கக் கட்டணம், இரவு நேர கூடுதல் கட்டணமின்மை போன்ற சலுகைகளை அறிவிப்பதாலும் வாடிக்கையாளர்கள் புதிய கால் டாக்ஸி நிறுவனங்கள் வருவதை வரவேற்றுள்ளனர்.

கரூர் நகரில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட கால் டாக்ஸி நிறுவனங்கள் உள்ள நிலையிலும் ஆண்டுதோறும் புதிது புதிதாக புதிய கால் டாக்ஸி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உள்ள போட்டிகளை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் புதிய கால் டாக்ஸி நிறுவனங்கள் அறிமுக சலுகைகளை அறிவிப்பதுடன் வேறு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூரில் இன்று (ஆக.31) புதிதாக கால் டாக்ஸி நிறுவனம் ஒன்று தொடங்கப்படுகிறது. அறிமுக சலுகையாக இன்று உள்ளூர் அழைப்புகளுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.40 என அறிவித்துள்ளது. மேலும், அனைத்து கால் டாக்ஸி நிறுவனங்களும் 4 கி.மீ ட்டருக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.100 என நிர்ணயித்துள்ளது நிலையில், புதிதாக தொடங்கப்படும் நிறுவனம் குறைந்தப்பட்ச கட்டணமாக 4 கி.மீட்டருக்கு ரூ.80 என நிர்ணயம் செய்துள்ளது.

ஏற்கெனவே தொடங்கப்பட்ட கால் டாக்ஸி நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களை கவர சுங்கக் கட்டணம் இலவசம் என அறிவித்திருந்தது. இந்நிலையில், புதிதாக தொடங்கப்படும் நிறுவனம் இரவு நேர கூடுதல் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. கால் டாக்ஸி நிறுவனங்களின் போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கால் டாக்ஸி கிடைப்பதுடன்,சுங்க் கட்டணம், இரவு நேரக் கூடுதல் கட்டணமின்மை போன்ற சலுகைகள் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் புதிய நிறுவனங்கள் வருவதற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in