

புதுடெல்லி: பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இருவரும் இணைந்து 1984-ல் என்டிடிவி-யைத் தொடங்கினர். 2009-10-ம் ஆண்டில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய்க்குச் சொந்தமான ஆர்ஆர்பிஆர் நிறுவனம் விசிபிஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.403 கோடி கடன் பெற்றது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் விசிபிஎல் நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை வாங்கியது. அதையடுத்து, விசிபிஎல் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிடிவியின் 29% பங்குகள் அதானி குழுமம் வசமாகும். மேலும், என்டிடிவியின் பிற பங்குதாரர்களிடமிருந்து 26% பங்குகளை வாங்க அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், என்டிடிவி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020-ம் ஆண்டு, என்டிடிவியின் பங்குகளை அதன் நிறுவனர்கள் விற்பதற்கும் வாங்குவதற்கும் செபி இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்தது. எனவே, என்டிடிவியில் அவர்கள் வசமுள்ள பங்குகளை அதானி குழுமத்துக்கு மாற்ற செபியிடம் ஒப்புதல் பெற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.