உணவகங்களில் சேவைக் கட்டண வழிகாட்டுதல்களை அமல்படுத்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தீவிரம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை உடனுக்குடன் செயல்படுத்துவதுடன், அதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

சேவைக் கட்டணம் விதிப்பது வழிகாட்டுதல்களை மீறும் செயல், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை உருவாக்கும், அது நுகர்வோரின் உரிமைகளைப் பாதிக்கும். அத்தகைய புகார்களை முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர்கள், வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏராளமான நுகர்வோர், தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் புகாரைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 ஜூன் 20-ம் வரை, சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 537 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹோட்டல்கள், உணவகங்கள் சேவைக் கட்டணத்தை கட்டாயமாக்குதல், சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதை எதிர்க்கும் பட்சத்தில் நுகர்வோரை சங்கடப்படுத்துதல், சேவைக் கட்டணத்தை வேறு பெயரில் சேர்ப்பது ஆகியவை நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முக்கிய குறைகள்.

2022 ஜூலை 5-ம் தேதி முதல் 2022 ஜூலை 8-ம் வரை அதாவது சிசிபிஏ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட பின்னர், 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேவைக் கட்டண புகார்களில் முதல் 5 இடத்தில் புதுடெல்லி, பெங்களூரு மும்பை, புனே, காசியாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in