

இந்தியாவில் பல்வேறு சேவைகள் மட்டுமின்றி அரசு சேவைகளும் ஆன்லைனில் பெறும் வசதி பெருகி வருகிறது. குறிப்பாக கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதுபோன்ற வசதியை பெறும் நடவடிக்கை வேகமடைந்துள்ளன.
அந்த வகையில் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலகம் சென்று சோதனை ஓட்டம் முடித்து பெறுவதற்கு பதிலாக அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து பெறலாம்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிக்காக பதிவு செய்து, அவர்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தற்போது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த புதியமுறையானது அமலுக்கு வந்துள்ளது.
எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழில் முகவரி மாற்றம், சர்வதேச ஓட்டுநர் அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல், தற்காலிக மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம் ஆகிய பணிகள்.
மேலும், முழுவதுமாக கட்டுமானம் செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம், டூப்ளிகேட் வாகனப் பதிவு சான்றிதழ், வாகனப் பதிவுக்கான என்ஓசி சான்று, மோட்டார் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், வாகனப் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற அறிவிப்பு, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பம், உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல், வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகனத்தின் உரிமத்தை மாற்றுவதற்கான விண்ணப்பம் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
போக்குவரத்து அமைச்சின் வலைத்தளத்திற்கு https://parivahan.gov.in/parivahan//en செல்ல வேண்டும். அதன் முகப்புப்பக்கத்தில் ஆன்லைன் சேவைகள் என்ற பகுதிக்கு சென்றால் சேவைகள் குறித்த விவரங்கள் இருக்கும்.அந்த மெனுவில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும். அப்ளை ஓட்டுநர் உரிமம் என்பதை தேர்வு செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
வாகனம் ஓட்ட கற்பவர்கள் (New Learner Licence) அல்லது ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் மாற்று ஆவணம் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other) என இதர சேவைகள் பலவும் இருக்கும். இவற்றில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்து கொள்ளலாம்.
பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை இதற்கு தேவைப்படும் ஆவணங்களாகும். ஓட்டுநர் உரிமம் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.
ஆவணங்களை பதிவேற்றிய பிறகு விண்ணப்பிக்க என்ற பகுதிக்கு சென்று விண்ணப்பிக்கவும். இதன் பிறகு ஒப்புகை சீட்டு கிடைக்கும். அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது கணிணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பதிவேற்றத்திற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி கற்றுணர் உரிமத்தை பெற முடியும்.
பயிற்சி மையங்களில் பிரத்யேக டிரைவிங் டெஸ்ட் டிராக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். பயிற்சி மையங்களில் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆர்டிஓவை சோதனைக்கு வராமலேயே உரிமம் வழங்கப்படும்.அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்கள் இலகுரக மோட்டார் வாகனங்கள் (LMVs) மற்றும் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் (HMVs) ஆகியவற்றுக்கான பயிற்சியை வழங்க முடியும்.
பயிற்சியின் மொத்த கால அளவு 29 மணிநேரமாக இருக்கும், இது தொடக்கத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். பயிற்சி மையங்கள் பாடம் மற்றும் நடைமுறை அறிவையும் வழங்கும்.
இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்புப் பயிற்சிகளை வழங்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பயிற்சி மையங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது.
இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் ஓட்டுநர் பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன, ஏனெனில் இது ஓட்டுநர் உரிம முறையைத் தனியார்மயமாக்கும். இதுபோன்ற மையங்கள் முறையான சரிபார்ப்பு மற்றும் சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமம் வழங்குமோ என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.