வருமான வரித் துறை விதிக்கும் அபராதங்களும் நடவடிக்கைகளும் - ஒரு தெளிவுப் பார்வை

வருமான வரித் துறை விதிக்கும் அபராதங்களும் நடவடிக்கைகளும் - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
4 min read

வருமான வரித் துறை ஒரு சட்டரீதியான அமைப்பு என்பதால், ஒரு சட்ட அமைப்புக்கு உள்ள பல அதிகாரங்கள் வருமான வரித் துறைக்கும் உண்டு. வரி செலுத்தாதவர்கள் மீது அபராதம் விதிக்கவும், தண்டனை வழங்கும் அதிகாரமும் வருமான வரித் துறைக்கு உண்டு. எல்லா தண்டனைகளும் திருந்துவதற்குதான் என்பதால், தண்டனை வழங்கும் அதே அமைப்பு தவறுகளை திருத்திக்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த வகையில், எந்ததெந்த சூழ்நிலைகளில் வருமான வரித் துறை வரிசெலுத்தும் ஒருவருக்கு அபராதம் விதிக்கும், தண்டனை வழங்கும் என்று விளக்குகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி....

அறியாமல் செய்யும் தவறு: வருமான வரியை பொறுத்தவரையில் வரி செலுத்தும் அனைவருக்கும் வரும் பொதுவான சந்தேகம் ஒன்று உண்டு. அதாவது, வருமான வரி தாக்கல் செய்யும் போது ஏதாவது தவறு செய்து விட்டால் அல்லது தவறாக வருமானம் தாக்கல் செய்து விட்டால் என்ன நடக்கும் என்பதே அந்த சந்தேகம். தவறுகளை திருத்திக் கொள்ள வருமான வரித் துறை வாய்ப்புகளை வழங்குகிறது. அவை என்ன என்று இப்போது பார்க்கலாம். பொதுவாக என்ன தவறுகள் வரலாம் என்றால், அரித்மெட்டிக் தவறு எனச் சொல்லப்படும் எழுதப்படும் எண்களில் பிழை செய்திருக்கலாம்.

உதாரணமாக வரி செலுத்தும் ஒருவரின் வருமானம் 12,00,000 என்று வைத்துக் கொண்டால் அதை அவர் எழுதும் போது, ஒரு பூஜ்ஜியத்தை விட்டு விட்டார் என்றால் வருமானம், 1,20,000 என்று மாறிவிடும். அதே போல ஒரு பூஜ்ஜியத்தை அதிகமாக போட்டுவிட்டார் என்றால், அவரின் வருமானம் 1,20,00,000 என்று மாறி விடும். இந்த இரண்டும் தவறு தான். ஏனென்றால் அதனை வைத்துதான் வரி கணக்கிடப்படும். ஒரு பூஜ்ஜியம் அதிகமாக போட்டுவிட்டால் வரி செலுத்துபவரின் வருமானத்தை விட வரி தொகை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

வரி செலுத்துபவர் இதனை அறியாமல், அவரது உண்மையான வருமானத்திற்கு செலுத்த வேண்டிய வரியை அவர் செலுத்தி விட்டு வந்து விடுவார். ஆனால் வருமான வரித் துறையில், தற்போது கணினி மூலமாகவே தகவல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதால், வரி செலுத்துபவர் கொடுத்த தகவல் அப்படியே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், நாம் வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கித் தொகை செலுத்த வேண்டி இருக்கிறது என்று டிமாண்ட்- ஆக வந்து நிற்கும். கிட்டத்தட்ட வருமானத்தில் 40 சதவீதம், மற்றும் வட்டி என ஒரு பெரிய தொகை வருமான வரியாக செலுத்த வேண்டியது இருக்கும்.

சரி இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நாம் என்ன செய்வது, கவலையே வேண்டாம் இது போன்ற எண்களில் நடக்கும் பிழைகளை நிச்சமயமாக சரி செய்து கொள்ளலாம். பொதுவாக இது மாதிரியான சமயங்களில், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சென்ட்ரல் பிராஸசிங் யூனிட் என்று சொல்லப்படும் அமைப்பில், தாக்கல் செய்த கணக்கில் ஏதோ தவறு இருக்கிறது என்ற தெரியவந்தால், அங்கிருந்து வரி செலுத்துபவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.

ரிவைஸ்டு ரிட்டர்ன் :வரி செலுத்துபவர் செய்தது சிறிய தவறுதான் என்ற போதிலும் அதன் விளைவுகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளில், இரண்டு வழிகளில் அதனை சரி செய்ய முடியும். ஒன்று, சென்ற ஆண்டை விட நடப்பு ஆண்டின் வருமானத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் போது கண்டிப்பாக வருமான வரித்துறையில் இருந்து விளக்கம் கேட்டு மின்னஞ்சல் வரும். அதற்கு நாம் விளக்கம் கொடுத்தாலே போதும் பிரச்சினையை சரி செய்து விடலாம்.

ஒருவேளை அப்படி மின்னஞ்சல் வராதபட்சத்தில், வரி செலுத்துபவர் ரிவைஸ்டு ரிட்டர்ன் என்று சொல்லப்படும் திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்யலாம். இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுவோம். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, இந்த திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி செலுத்துபவர் வருமான வரி தாக்கல் செய்த பின்னர், அதில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில், வரி தாக்கல் செய்த ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் திருத்தப்பட்ட படிவத்தை வரி செலுத்துபவர் தாக்கல் செய்யலாம்.

சரி வருமான வரித் துறையில் இருந்து மின்னஞ்சல் வரவில்லை. வரி செலுத்துபவரும் திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்ய மறந்து விட்டார். இந்தச்சூழ்நிலையிலும் அந்த தவறை திருத்திக்கொள்ள முடியும். வரி செலுத்துபவர் நடந்த தவறை விளக்கி வருமானவரித்துறையில் அதற்கென உள்ள ஆணையரிடம் மனு தாக்கல் செய்ய முடியும் அவ்வாறு செய்யும் பல சமயங்களில் அந்த ஆணையர் அதனை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் வருமான வரித்துறையால் வழங்கப்படுகின்றன.

அபராதங்கள்: வருமான வரித் துறை வரி செலுத்தும் ஒருவரிடமிருந்து அதிகமானத் தொகையை அவருக்குத் திருப்பி தரும் போது அதற்குரிய வட்டியை வழங்கும். அதேபோல, வரி செலுத்துபவர் வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்கும் போது வட்டி வசூலிக்கவும் செய்யும். இவைகளைப் போல, வருமான வரித் துறை சில சமயங்களில் வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் (Penalty) விதிக்கும். வரிமான வரி குறித்து பேசும் போது இதுவும் முக்கியமான ஒன்று. வருமான வரித்துறை எப்போது எல்லாம் அபராதம் விதிக்கும் என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரித் துறை பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதிக்கலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், வருமான வரித்துறையின் வட்டியில் இருந்து அது வித்தியாசமானது. எப்படி என்று கேட்கிறீர்களா, வருமான வரித் துறையின் வட்டிகளான, 234 ஏ, பி, சி வட்டிகளை எந்த வருமான வரித் துறை அதிகாரிகளாலும் தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால் வருமான வரித்துறை விதிக்கும் சில வகை அபராதங்களை தள்ளுபடி செய்யவோ, 50 சதவீதத்தில் இருந்து 200 சதவீதம் வரையிலோ அல்லது அபராதம் இல்லாமலே வரி செலுத்தச் சொல்லும் அதிகாரம் மதிப்பீட்டாளர் முதல் ஆய்வாளர் வரை உள்ள அதிகாரிகளுக்கு உள்ளது.

தெரிந்து செய்யும் தவறு: சரி வருமான வரித் துறை எப்போது அபராதம் விதித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு போகும் என்றால், வரி செலுத்துபவர் அவருக்கு தெரிந்தே தகவல்களை வருமான வரித்துறையிடமிருந்து மறைத்திருக்கிறார் என்ற சூழலில் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இதிலும் கூட வரி செலுத்துபவர் குறிப்பிட்டத் தகவல்களை அவருக்குத் தெரிந்தே மறைத்திருக்கிறார் என்று நிரூப்பிக்க வேண்டும். வரி செலுத்துபவருக்குத் தெரிந்தே சில வருமானங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது அல்லது தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால் அபராதம் விதிக்கப்படும்.

இவை தவிர சில சமயங்களில் வருமான வரித் துறையில் இருந்து வந்திருக்கும் நோட்டீஸ்களுக்கு வரி செலுத்துபவர் பதில் அளிக்காமல் விட்டிருப்பார். அதே போல உரிய காலத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்திருப்பார். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அபராதம் விதிக்கப்படலாம். தவறு நடந்திருக்கிறது என்று தெரியவந்தால் வருமான வரித் துறை அபராதம் விதிக்கும். அப்போதும் கூட வரி செலுத்துபவர் அந்தத் தவறை தெரிந்து செய்ய வில்லை என்று நிரூபித்தால் அபராதத்தை நீக்க முடியும். ஆனால் வட்டி அப்படி இல்லை. வட்டி விதிக்கப்பட்டால் கண்டிக்கப்பாக அதனை கட்டியே தீரவேண்டும்.

வருமான வரித் துறையும் தண்டனையும்: வட்டி, அபராதம் போல வருமான வரித் துறையில் சட்ட ரீதியான தண்டனை நடைமுறைகளும் இருக்கின்றன. அதாவது வருமான வரியில் முறைகேடு செய்திருந்தால் அவர் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதே தண்டனை நடைமுறை. வருமான வரி செலுத்த வில்லை என்றால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. கைது என்பதற்கு முன்பாக மூன்று நான்கு நிலைகள் உள்ளன.

முதலாவதாக வருமான வரி கட்ட சொல்லி கடிதம் அனுப்பலாம், நினைவுக் கடிதம் அனுப்பலாம், டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பலாம். வரி செலுத்துபவர் தாமதமாக வரி செலுத்தி இருக்கலாம் அல்லது செலுத்தாமல் இருக்கலாம் என்கிற பட்சத்தில் அதற்குரிய வட்டி, அபராதத்துடன் வரி கட்ட வேண்டியது இருக்கும். அபராதம் என்பது கட்ட வேண்டிய வரியில் 50 சதவீதத்தில் இருந்து 200 சதவீதம். அதனைக் கட்டி விட்டால் சிக்கல் இல்லை. வருமான வரித் துறையில் இருந்து வந்திருக்கும் நோடீஸ், சம்மன்களுக்கு பதில் அளிக்கவில்லை. விளக்கம் அளிக்க நேரில் அழைத்தும் செல்லவில்லை என்றால் அதற்கு எல்லாம் அபராதம் விதிக்க முடியும். இப்போது விளக்கம் அளிக்க நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டிருப்பதால் இணையம் வழியாகவே பதில் சொன்னால் போதும்.

இந்த நிலைகளுக்கு அடுத்த படியாக உள்ள விஷயம் சர்வே அல்லது சர்ச் அதாவது வழக்கு மொழியில் ரெய்டு செல்வது. அந்த குறிப்பிட்ட நபர் வீட்டிற்கு சென்று சோதனை செய்து கணக்கில் வராத பொருள்களை பறிமுதல் செய்துவிட்டு வந்து, வரி செலுத்துபவர் இவ்வளவு வரி செலுத்த வேண்டும் எனக் கூறி அதனைக் கட்டச் சொல்லலாம்.

இதுதவிர அட்டாட் மெண்ட் என்ற ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு வருமான வரித் துறைக்கு நிறைய வரி செலுத்த வேண்டியது இருக்கிறது. ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறது அல்லது அசையும் அசையா சொத்துக்கள் இருக்கின்றன என்றால் வருமான வரித் துறை அவைகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும்.

குற்ற தண்டனை: இந்த எந்த நடைமுறைக்கும் ஒருவர் ஒத்துவராத பட்சத்தில் அந்த நபருக்கு குற்ற தண்டனை தர வேண்டும். அவர் குற்றம் இழைத்திருக்கிறார் என்ற அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கப் படவேண்டும். அந்த தண்டனை சிறை தண்டனை தானா, அப்படி சிறையில் அடைக்க முடியுமா என்று நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கலாம். அநேகமாக சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் எங்கேயும் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அந்த அதிகாரம் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒருவரைக் குற்றவாளி என்று கூறி அவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதனைத் தவிர்த்து சில அமைப்புகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் அவை பயன்படுத்தப்பட்ட கூடாது என்பதற்காகவே வழங்கப்பட்டிருக்கும்.

வருமான வரித்துறை ஒருவர் மீது குற்ற தண்டனை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக மேல சொன்ன அனைத்து நடவடிக்கைகளையும் முதலில் செய்திருக்க வேண்டும். வரி செலுத்த வேண்டிய ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பதால் வருமான வரித்துறைக்கு எந்த லாபமும் இல்லை. வருமான வரித் துறையின் நோக்கம் அரசாங்கத்திற்கு வருமானம் வரும் வழி வகைகளைச் செய்தவது தானே தவிர, தண்டனை தரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை அதனால், வருமான வரித் துறையில் இருக்கும் தண்டனை நடைமுறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. அந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே வழங்கப்பட்டிருக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in