

வீட்டுக்கடன் என்றால் அதற்கு பத்திரம், இசி, மாத வருமானத்திற்கான சான்று, கடனுக்கு பொறுப்பான ஆவணம், கட்டிட அனுமதி இப்படி பல சான்றுகள் தேவை. இதனை ஆய்வு செய்து கடன் வழங்க பல நாட்கள் ஆகலாம். ஆனால் குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் கடன் நகைக்கடன். இதனால் பெரும்பாலான இந்திய நடுத்தர குடும்பத்தினர் பெரும்பாலும் நகைக்கடனையே முன்னுரிமையாக வைத்துள்ளனர்.
வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் வழக்கமான வட்டி விகிதத்தில் இருந்து தங்க நகைக்கடனுக்கு வட்டி சற்றுக் குறைந்தது. அதேசமயம் எளிதாக கிடைக்கும் கடன் என்பதால் பலரும் தங்க நகைக் கடன்களை வாங்குகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதம், இந்தியாவில் கோவிட்-19 தொற்று மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதனால் அந்த மாதம் 24-ம் தேதியிலிருந்து நாடெங்கிலும் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் பல்வேறு துறைகளும் முடங்கின.
குடும்பத்தின் தேவைகளுக்கு கடன் வாங்கி சமாளித்தனர். அந்த நேரத்தில் பெருமளவு நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது தங்க நகைக்கடன்.
அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நகைக்கடன் பெறும்போது சில விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.
பாதுகாப்பு முக்கியம்
அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும்போது வீட்டை அடைமானம் வைத்து வாங்குகிறோம். வீட்டை யாரும் அசைத்து எடுத்துச் சென்ற விட முடியாது. எனவே அடமானமாக கொடுக்கும் பொருளின் பாதுகாப்பு பற்றி கவலையில்லை. ஆனால் தங்கம் அப்படிபட்டது அல்ல.
கொள்ளை போகும் பொருள் என்பதால் கவனம் தேவை. சில நிறுவனங்களில் அடகு வைக்கும் தங்க நகைகளைப் பத்திரமாக வைத்திருக்கும் வசதிகள் இருக்காது. கடன் தொகையைச் செலுத்திய பிறகு உங்கள் நகைகள் மீண்டும் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். அதற்குரிய நிறுவனமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவிகிதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம். சில நிறுவனங்கள் கூடுதல் தொகையை கடனாக வழங்க முன் வரலாம். ஆனால் அங்கு வட்டி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வட்டி எவ்வளவு?
அதிக பணம் தேவை என்பதால் அதிகமாகக் கடன் தரும் வங்கிகளையோ, நிதி நிறுவனங்களையோ அணுகலாம். ஆனால் அதிகமான பணத்தை அளிக்கும் நிறுவனங்கள் அதிகமான வட்டியையும் கேட்கலாம். எனவே, வட்டியும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
கட்டணங்கள்
பெரும்பாலான வங்கிகளில் தங்கநகைக் கடன் வழங்க செயல்பாட்டுக் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும் சில வங்கிகளில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் தொகையை மட்டுமின்றி மாதாந்தர தவணையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற கட்டணங்களையும் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்த கட்டணங்கள் என்ன என்று ஒப்பிட்டு அது மற்ற நிறுவனங்களின் கட்டணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
தங்க நகை கடன் வாங்கின பலரும் சரியாக கட்டாததால் மூழ்கி போனதாக கூறுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் தங்க நகைக்கான மாதாந்தரத் தவணையை தவறவிடுவது தான். இதனால் அடகு வைத்த தங்கத்தை இழக்கநேரிடும்.