உங்கள் ‘பே சிலிப்’பில் என்ன உள்ளது?- விவரங்களுக்கு என்ன பொருள்: தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ‘பே சிலிப்’பில் என்ன உள்ளது?- விவரங்களுக்கு என்ன பொருள்: தெரிந்து கொள்ளுங்கள்
Updated on
4 min read

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் அல்லது பணியாளர் தாங்கள் செய்யும் பணிக்கு சம்பளம் பெறுகின்றனர். தாங்கள் ஊழியருக்கு வழங்கும் சம்பளம் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணமே ஆங்கிலத்தில் பே சிலிப் அல்லது சேலரி சிலிப் என அழைக்கப்படுகிறது.

தமிழில் சம்பளச் சீட்டு அல்லது ஊதியச் சீட்டு என்பது ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் ஆவணமாகும். சம்பளச் சீட்டில் பணியாளர் சம்பளம் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கான விலக்குகள் பற்றிய விரிவான விவரம் உள்ளது. இந்த ஆவணம் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிறுவனங்களால் அனுப்பப்படும்.

‘பே சிலிப்’ என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெறும் சம்பளம் தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணமே சம்பள சீட்டு என்று அழைக்கப்படுகிறது. ஒரு பணியாளரை பொறுத்தவரையில் சம்பள சீட்டு என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அவர் என்ன வருவாய் ஈட்டுகிறார் என்பதற்கான அடிப்படை ஆதாரமாகும். இது பல இடங்களில் தேவைப்படுகிறது. கடன் பெறவும், தனது வருவாயை பிறரிடம் உறுதி செய்யவும் இந்த பே சிலிப் கட்டாயம் தேவையாகும்.

அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ், போக்குவரத்து அலவன்ஸ், மருத்துவ அலவன்ஸ், சிறப்பு அலவன்ஸ், டிடிஎஸ் எனப்படும் வருமான வரி கழிப்பு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி போன்ற அனைத்து விவரங்களும், விவரமாக பே சிலிப்பில் இடம் பெற்றுள்ளன.

பே சிலிப் எனப்படும் ஊதியச் சீட்டில் நிறுவனத்தின் பெயர், பணியாளரின் பெயர், பதவி மற்றும் பணியாளரின் குறியீடு போன்ற அடிப்படைத் தகவல்கள் உள்ளன. சம்பளத்தின் அடிப்படை வருமானம், வருவாய்கள், விலக்குகள் என விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

வருமானம்: பே சிலிப்பில் வருமானப் பகுதியானது அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ் உள்ளிட்டவை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

அடிப்படை ஊதியம்: இது சம்பளத்தின் அடிப்படை கூறு ஆகும். இது சம்பளத்தில் 35-50 சதவீதம் ஆகும். இது சம்பளத்தின் பிற கூறுகளின் அடிப்படையை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த சம்பள பிரிவினரில் அடிப்படை சம்பளம் அதிகமாக இருக்கும். பணியாளரின் சம்பளம் வளரும் போது, மற்ற வகை அலவன்ஸ்கள் அதிகமாக இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைவாக வைத்திருக்கவே விரும்புகின்றன. எனவே அலவன்ஸ் ஊதியம் முதலிடம் பெறாது. ஊழியரின் கைகளில் கிடைக்கப் பெறும் சம்பளம் 100 சதவீத வருமான வரிக்கு உட்பட்டது. இது அடிப்படை சம்பளத்தை மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. நீங்கள் பெறும் பே சிலிப்பில் வருவாய் பக்கத்தில் அடிப்படை சம்பளம் என்பது முதல் கூறு ஆகும்.

அகவிலைப்படி: ஒருவரின் ஊதியத்தில் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட இது செலுத்தப்படுகிறது. இது பொதுவாக அடிப்படை ஊதியத்தில் 30-40 சதவீதம் ஆகும். அகவிலைப்படி நேரடியாக வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது வெவ்வேறு இடங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது. நிறுவனங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.

வருமான வரியின் கீழ் பார்க்கும்போது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஊதியமாக கருதப்படுகிறது. எனவே இது வரிக்கு உட்பட்டது. இது அடிப்படை ஊதியத்திற்குப் பிறகு ஊதியச் சீட்டின் வருவாய் பக்கத்தில் இடம் பெறும்.

வீட்டு வாடகை அலவன்ஸ்: வாடகை வசதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) வழங்கப்படுகிறது. HRA என்பது ஊழியர் வசிக்கும் நகரத்தைப் பொறுத்தது. மெட்ரோ நகரத்திற்கான அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஹெச்ஆர்ஏ. இது மற்ற அனைத்து நகரங்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதமாகும். வீட்டு வாடகை அலவன்ஸ் என்ற அடிப்படையில் இருப்பதால் பணியாளர் வாடகையை செலுத்தினால், குறிப்பிட்ட வரம்பு வரை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதுவும் உங்கள் பே சிலிப்பின் வருவாய் என்ற பக்கத்தில் இடம் பெறும்.

போக்குவரத்து அலவன்ஸ்: கன்வேயன்ஸ் அலவன்ஸ் எனப்படும் போக்குவரத்து அலவன்ஸ் என்பது ஒரு பணியாளருக்கு வேலைக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் ஒரு நிறுவனம் செலுத்தும் தொகை. இது ஒரு அலவன்ஸ். எனவே குறிப்பிட்ட வரம்பு வரை இதற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பொதுவாக போக்குவரத்து அலவன்ஸில் வருமான வரியைச் சேமிக்கலாம்.இதுவும் உங்கள் பே சிலிப்பின் வருவாய் என்ற பக்கத்தில் இடம் பெறும்.

மருத்துவ அலவன்ஸ்: மருத்துவ அலவன்ஸ் என்பது ஒரு பணியாளருக்கு பணிபுரியும் காலத்தில் மருத்துவச் செலவுகளுக்காகச் செலுத்தும் தொகையாகும். மருத்துவ அலவன்ஸில் வருமான வரியைச் சேமிக்கலாம். இருப்பினும், மருத்துவக் கட்டணத்தை ஆதாரமாகச் சமர்ப்பித்தால் மட்டுமே ஊழியர் இந்தத் தொகையைப் பெற இயலும். . ஊழியர் மருத்துவ பில்களின் சான்றுகளை சமர்ப்பிக்கத் தவறினால், அவர்கள் பெறும் அலவன்ஸ்க்கு முழுமையாக வருமான வரி விதிக்கப்படும்.

விடுப்பு பயணப்படி: விடுமுறையில் இருக்கும் ஊழியர்களின் பயணச் செலவை ஈடுகட்ட நிறுவனங்கள் அதைக் கொடுக்கிறார்கள். பணியாளரின் உடனடி குடும்ப உறுப்பினர்களின் பயணச் செலவுகளும் இதில் அடங்கும். குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு விலக்கு பெற பயணத்திற்கான சான்று தேவை. பயணத்தைத் தவிர பயணத்தின் போது ஏற்படும் எந்தச் செலவுகளும் விடுப்பு பயணப்படியின் கீழ் வருமான வரி விலக்கில் கணக்கிடப்படாது. நான்கு காலண்டர் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் இரண்டு பயணங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு பொருந்தும்.

சிறப்பு அலவன்ஸ்: சிறப்பு அலவன்ஸில் செயல்திறன் அடிப்படையிலான அலவன்ஸ் அடங்கும். இவை பொதுவாக பணியாளர்களை சிறப்பாக பணிபுரிய ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த அலவன்ஸ் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். சிறப்பு அலவன்ஸ்களுக்கு 100 சதவீதம் வருமான வரி உண்டு.

கழித்தல்: சம்பளச் சீட்டின் கழித்தல் பகுதியானது தொழில் வரி, டிடிஎஸ் எனப்படும் வருமான வரி மற்றும் இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றை கொண்டு இருக்கும்.

தொழில் வரி: தொழில்சார் வரி என்பது தொழில் வல்லுநர்களுக்கு வருமானம் ஈட்டுவதில் மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரியாகும். இது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே செலுத்தப்படுகிறது. கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், அசாம், சத்தீஸ்கர், கேரளா, மேகாலயா, ஒரிசா, திரிபுரா, ஜார்கண்ட், பிஹார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளன.

இது தொழில் செய்பவர்களிடம் மட்டும் அல்லாமல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் விதிக்கப்படுகிறது. அதாவது தொழிலாளர்களுக்கும் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகை வருமான வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்கப்படுகிறது. மேலும், இது வழக்கமாக ஒவ்வொரு மாதமும் சில நூறு ரூபாய்களாகவோ, 6 மாதத்திற்கு ஒருமுறையோ, மொத்த வரியாகவோ பணியாளர் சம்பளத்தில் இருந்து நிறுவனங்களால் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனை நிறுவனங்கள் மாநில அரசுக்கு கட்டி விடுகின்றன.

வருமான வரி (டிடிஎஸ்): வருமான வரித் துறையின் சார்பாக நிறுவனம் முன்கூட்டியே பிடித்தம் செய்யும் தொகை டிடிஎஸ் எனப்படுகிறது. இது பணியாளரின் மொத்த வருமான வரி உச்ச வரம்பு அடிப்படையாகக் கொண்டு பிடித்தம் செய்யப்படுகிறது. ஈக்விட்டி பண்டுகள், மியூச்சுவல் பண்டுகள், ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மற்றும் வரி சேமிப்பு கொண்ட பிக்சட் டெபாசிட் போன்ற வரி விலக்கு கொண்ட முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் இதைக் குறைக்கலாம்.

எனவே, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி பிரிவின் கீழ் வரும் முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் இந்த தொகையை பெற்றுக் கொள்ள இயலும். இதனை சரியாக கணக்கிட்டு விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒருவர் வீட்டிற்கு அதிகமான சம்பளத்தை எடுத்துச் செல்ல இயலும். முதலீடு செய்த விவரங்களை நிறுவனத்திடம் ஆவணங்களுடன் தந்து ஒருவர் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை குறைத்துக் கொள்ள இயலும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF): இது வருங்கால வைப்பு நிதிக்கு பணியாளரின் பங்களிப்பு தொகையாகும். இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் விலக்கு பெற தகுதி பெறுகிறது. வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பணியாளரின் ஓய்வு காலத்திற்கான நிதி சேமிப்பாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இதை நிர்வகிக்கிறது. பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் இபிஎப்க்கு செல்கிறது. பணியமர்த்துபவர் அல்லது நிறுவனம் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களுக்குப் பொருத்தமான பங்களிப்பை செய்கின்றனர்.

இருப்பினும், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான அனைத்து பங்களிப்புகளும் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லாது. ஊழியர்களின் பங்களிப்புகளில், 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு செல்கிறது. மீதமுள்ள தொகை இபிஎப் திட்டத்தில் சேமிக்கப்படுகிறது.

இருப்பினும் ஊழியர்கள் இபிஎப் திட்டத்திலிருந்து (வரம்பு வரை) விலகி, ஈக்விட்டி பண்டுகள் போன்ற கூடுதல் வருவாய் ஈட்டும் திட்டங்களில் முதலீடு செய்யவும் அனுமதியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in