

வங்கிகளில் கடன் வாங்கும் போது, வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான ஆவணங்களும், வாடிக்கையாளரிடமிருந்து வாங்கி பெற்றுக் கொள்ளும் கடன் ஒப்புகை ஆவணமும் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் அந்த ஆவணங்களை படித்துக் கூட பார்ப்பதில்லை. எல்லா வாடிக்கையாளிடமும் நீக்கமற இருக்கும் இந்த போக்கு சரியில்லை என்று கூறுகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம.வீரப்பன். மேலும், அவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு கடன் வழங்க வங்கி எவ்வாறு முடிவெடுக்கிறது. கடன் ஆவணங்களில் கையெழுத்திடும் போது வாடிக்கையாளர்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று விவரிக்கிறார்.
வாடிக்கையாளருக்கு மதிப்பெண்: வங்கியில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன்கள் வாங்கச் செல்லும் போது "ஸ்கோரிங்" என்ற ஒன்று சொல்வார்கள். அதாவது வங்கிகள் வாடிக்கையாளருக்கு சில விஷயங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும். இந்த மதிப்பிடும் முறையில் வங்கிக்கு வங்கி சில வித்தியாசங்கள் இருக்கும். இந்த மதிப்பெண் வழங்கும் முறையின் முக்கியமான விஷயங்களை நாம் இப்போது பார்க்கலாம். முதல் விஷயமாக வாடிக்கையாளரின் வயது குறைவாக இருந்தால் அவருக்கு மதிப்பெண் கூடும். வயது குறைவாக இருந்தால் எளிதில் கடனை கட்டிவிடுவார் என்பதால் அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும். சொந்த வீடு வைத்திருந்தால், ஒரே வீட்டில் நீண்ட நாட்களாக குடியிருந்தால் அந்த வாடிக்கையாளருக்கு மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்படுகிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், அடிக்கடி வீடு மாறுகிறவர்களுக்கும் மதிப்பெண்கள் குறைவாகவே வழங்கப்படும்.
நிரந்தர வேலை நிறைய மதிப்பெண்: மதிப்பெண் வழங்குவதில் நீங்கள் பார்க்கும் வேலையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளர் அரசு வேலையில் இருந்தால். வேலைக்கு உத்தரவாதம் என்பதால் அவருக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். தொழில்தகுதி பெற்றிருப்பவர்களுக்கு மதிப்பெண் அதிகம் வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் வேலையில் இருந்தால் அதற்கும் மதிப்பெண் அதிகமாக வழங்கப்படும். வங்கி ஒன்றில் நீண்ட நாட்களாக கணக்கு வைத்திருந்தால் அதற்கும் தனியாக மதிப்பெண்கள் உண்டு. சராசரி வங்கியிருப்பு அதிகமாக இருந்தால் அதற்கும் மதிப்பெண் அதிகம். இதில் வாடிக்கையாளர் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பபடாமல் இருக்க வேண்டும். முறையான வங்கிப் பரிவர்த்தனை போன்ற திருப்திகரமான நடவடிக்கைகள் போன்றவைகளைப் பார்க்கும்.
அதேபோல் கடன்களின் திருப்பி செலுத்தும் கால அளவும் இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் பார்க்கப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாக இருந்தால் மதிப்பெண் குறைந்து விடும். அதேபோல வாடிக்கையாளரின் சம்பளம் நேரடியாக சம்மந்தப்பட்ட வங்கியிலேயே செலுத்தப்படுவதற்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் வழங்கி இருக்கும் காசோலை மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மதிப்பெண் குறைவு, பணத்தை வடிக்கையாளரே நேரடியாக வங்கியில் கட்டுகிறார் என்றால் மிகக்குறைவான மதிப்பெண்ணே வழங்கப்படும். இப்படி பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு அவைகளுக்கு மொத்தமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதில் ஒரு கட்-ஆப் வைத்து அதன்படி வாடிக்கையாளருக்கு கடன் வழங்குவது குறித்து முடிவுவெடுக்கப்படும்.
கையெழுத்திடும் போது கவனம்: வங்கியில் கடன் வாங்கும் போது, அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுகையில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். வங்கியில் குறைந்த அளவில் கடன் வாங்கும் போதும் கூட 10, 20 கையெழுத்துக்கள் வாங்கப்படுவதாக கேள்விப்பட்டிருக்கலாம். கடன் வாங்கும் போது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு அநேக வாடிக்கையாளர்கள் என்ன எழுதி இருக்கிறது என்பதை படித்து பார்க்காமலேயே கையெழுத்து போடுவார்கள். இன்னும் சில நேரங்களில் ஆவணங்களில் ஏதும் எழுதாமலேயே கையெழுத்துப்போடும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். இதுமிகவும் தவறான ஒரு செயலாகும்.
வங்கியில் நீங்கள் ஒரு கேஷ் கிரெடிட் கடன் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான ஆவணத்தில், எவ்வளவு தொகை கடனாக வாங்கப்படுகிறது. என்ன தேதியில் வாங்கப்படுகிறது. எவ்வளவு வட்டி என்ற பகுதிகள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். கையெழுத்திடுவதற்கு முன்பாக இதனை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லா வங்கிகளிலும் இந்த ஆவணங்கள் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளன. அதில் பல விஷயங்கள் எழுதப்பட்டிருக்கும். இவைகளில் வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர், காலத்திற்கு காலம் மாறுபடுவது, கடன் தொகை, அதற்கான வட்டி விகிதம், தவணைக் காலம் போன்றவைகள் கோடிடப்பட்டிருக்கும் கடன் வழங்கப்படும் போது அவை நிரப்பப்படும். தற்போது பல வங்கிகளில் இந்த ஆவணங்கள் கணினியில் இருக்கும், தேவைப்படும் போது கடன் விபரங்கள் நிரப்பப்பட்டு, பிரதி எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இங்குச் சொல்வது ஒரு அடிப்படையான கருத்து. தகவல் நிரப்பப்படாத எதிலும் கையெழுத்திட வேண்டாம். மற்றொன்று நீங்கள் கையெழுத்திடும் அனைத்து ஆவணங்களுக்கும் ஒரு பிரதி வாடிக்கையாளரும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளருக்கு அந்த உரிமை உண்டு. எப்போது வங்கியில் கடன் வாங்கினாலும் லோன் பைல் ஒன்றைவைத்துக் கொள்ளுங்கள். அதில் கடன் குறித்த அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கையெழுத்தே பிரதானம்: இன்னொரு முக்கியமான விஷயம் வங்கிகளில் கையெழுத்திடும் போது ஒரே மாதிரி கையெழுத்திடுங்கள். சிலருக்கு விதவிதமாக கையெழுத்திடும் வழக்கம் உண்டு. அப்படி கையெழுத்திடும் போது வங்கி அதனை நிராகரித்து விடும். வங்கிகளில் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கப்படும். அதில் தவறில்லை. ஆவணங்களில் ஏதாவது அடித்தல் திருத்தல் இருந்தால் அதிலும் கையெழுத்து வாங்கப்படும். முக்கியமாக பேலன்ஸ் கன்பர்மேஷன் லெட்டர் என்பதில் முன்கூட்டியே எதுவும் எழுதாமல் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு தவறான நடைமுறை. நல்ல வங்கியாளர்கள் இதனைச் செய்வதில்லை.
ஆவணங்களை படித்துப்பார்த்து கையெழுத்திட வேண்டும் என்றாலும், அனைத்து பக்கங்களையும் படித்துப் பார்ப்பது சாத்தியம் இல்லை என்பதால், நிரப்பப்படாத ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். வங்கியில் கையெழுத்தில்லாமல் எந்த செயல்பாடும் நடைபெறுவதில்லை. அதனால் ஆவணங்களில் கையெழுத்திடுவது முக்கியமானது. கையெழுத்திட்ட ஆவணகளுக்கு ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது கட்டாயம்.
கடன் ஒப்புகை கடிதம் (Loan Acknowledgment Letter): பேலன்ஸ் கன்ஃபர்மேஷன் லெட்டர் அல்லது லோன் அக்னாலெஜ்மெண்ட் லெட்டர் என்று ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் வாடிக்கையாளரிடமிருந்து வங்கிகள் வாங்கும். முதலிலேயே எல்லா ஆவணங்களிலும் கையெழுத்திட்ட பின்னர் தானே கடன் வழங்கப்பட்டது. இப்போது திடீரென ஏன் மறுபடியும் இன்னொரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கப்படுகிறது என்ற கேள்வி வாடிக்கையாளருக்கு வரலாம். அது ஏனென்றால், இந்தியன் லிமிட்டேஷன் சட்டம் என்ற ஒன்று உள்ளது. அதை தமிழில் இந்திய காலாவதிச் சட்டம் என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். அதன்படி, எல்லாவற்றிற்கும் சட்டரீதியாக செல்லுபடியாவதற்கு ஒருகால அளவு இருக்கிறது. அதன் பின்னர் அந்த ஆவணத்தைக் கொண்டு நீதிமன்றத்தை நாடி பணம் வாங்க முடியாது. உதாரணமாக ஒரு 'ப்ரோ நோட்'டில் கையெழுத்திட்டு கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், அந்த ப்ரோ நோட்டு மூன்று வருடங்களில் காலாவதியாகி விடும். அதன் பிறகு அதை கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் 'ப்ரோ நோட்டு' மூலமாக கடன் கொடுத்தவர்கள் இடையில் அதனை திருப்பி எழுதி வாங்கிக் கொள்வது வழக்கம்.
வங்கிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. வங்கி, வாடிக்கையாளருக்கு கடன் கொடுத்த பின்னர், வாடிக்கையாளரிடமிருந்து அவர் வங்கிக்கு இவ்வளவு கடன்தொகை திருப்பித் தரவேண்டும் என்று எழுதி வாங்கிக் கொள்ளும். இந்த கால இடைவெளி வங்கிக்கு வங்கி, கடனுக்கு கடன் மாறுபடும். வங்கிகள் இவ்வாறு எழுதி வாங்கிக் கொள்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. வாடிக்கையாளர் ரூ.10 லட்சத்திற்கு கேஷ் கிரெடிட் கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின்னர் அந்த கடன் மீது நிறைய பணம் டெப்பாசிட் செய்யப்பட்டிருக்கும். காசோலைகள் வழங்கப்பட்டிருக்கும். அந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.9.5 லட்சம் கடன் தொகை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை வங்கியில் 'ஆம் நான் இவ்வளவு தொகை வங்கிக்கு கடனாக கொடுக்க வேண்டும்' என்று வாடிக்கையாளரிடமிருந்து வங்கி எழுதி வாங்கிக்கொள்ளும்.
இதன்மூலம் தான் எவ்வளவு கடன் செலுத்த வேண்டும் என வாடிக்கையாளருக்கு தெரியவருகிறது. அதே நேரத்தில் இடையில் உள்ள பரிமாற்ற நடவடிக்கைகளை உறுதி செய்யவும் வாய்ப்பாக அமையும். வரும் காலத்தில் ஏதாவது பிரச்சினை வரும் போது வாடிக்கையாளர் அதில் கையெழுத்திட்டிருப்பதால், அனைத்திற்கும் அவர் சம்மதித்து விட்டார் என எதிராளி புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால் பேலன்ஸ் கன்ஃப்ர்மேஷன் கடிதம் வங்கிக்கு தரதான் வேண்டும். ஆனால் அதிலுள்ள தகவல்கள் எல்லாம் சரிதானா, வட்டி விகிதம், மீதமுள்ள கடன் தொகை அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து, தெளிந்த பின்னர் கையெழுத்திட வேண்டும். அது மிகவும் முக்கியமானது.