

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் மாதத்தில் மட்டும் 17.5 லட்சம் ஏசி இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாகும். மேலும், 2021 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ஏசி விற்பனை இரண்டு மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது. 2019 விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 30-35 சதவீதம் அதிகமாகும்.
தற்போதைய புள்ளி விவரங்களை பார்க்கும்போது நடப்பாண்டில் ஏசி விற்பனை 90 லட்சத்தை எட்டி புதிய சாதனை படைக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவில் ஏசி விற்பனை அதிகரிக்கும் நிலையில், இந்தியாவில் ஏசி நிறுவனங்களில் நம்பர் 1 இடத்தில் வோல்டாஸ் உள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் வோல்டாஸ் நிறுவனத்தின் விற்பனை 160 சதவீதம் உயர்ந்துள்ளது.
முன்னணி நிறுவனம்
குறிப்பாக வீடுகளுக்கான வோல்டாஸ் ஏசிகள் விற்பனையில் 170 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னணி பிராண்டாக உள்ள வோல்டாஸ் ஏசி சந்தையில் 25.4 சதவீதமாக உள்ளது. இவ்வளவு வலிமையான நிலையில் உள்ள வோல்டாஸ் நிறுவனம் எப்படி வளர்ந்தது என்பதை பார்க்கலாம்.
அறுபது வருடங்களுக்கு முன்னால் ஸ்விட்சர்லாந்து நிறுவனமான வோல்கார்ட் பிரதர்ஸ் எனும் நிறுவனம் இந்தியாவின் டாடா சன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வோல்டாஸ் லிமிடெட் நிறுவனமாகும்.
வோல்டாஸ் நிறுவனம், 1964-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் வோல்கார்ட் பிரதர்ஸ் நிறுவனமும், இந்தியாவின் டாடா சன்ஸ் குழுமமும் இணைந்து VOL + TAS என தொடங்கப்பட்ட கூட்டு நிறுவனமாகும். இதன் பிறகு, சிறிது காலத்திலேயே வோல்காட் நிறுவனம் இக்கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.
பின்பு இத்தொழில் முழுவதும் டாடா சன்ஸ் குழுமத்தின் வசம் வந்தது. ஆனாலும் வோல்டாஸ் என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஆரம்ப காலகட்டங்களில் ஏர்கண்டிஷனர் உற்பத்தியில் இந்தியாவில் தனித்திறனுடன் முன்னணியில் இருந்தது.
ரீ இன்ஜினீயரிங் மற்றும் இன்னோ வேஷன் எனும் இரண்டு விஷயங்களில் முன்னோடியாகத் திகழந்ததால் இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக முன்னோடி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. இந்தியாவில் மக்கள் பெரிதும் விரும்பும் ஏசியாகவே வோல்டாஸ் இருந்து வந்தது. ஏறக்குறைய இந்திய ஏசி சந்தை விற்பனையில் 40 சதவீதத்தை வோல்டாஸ் கையில் வைத்திருந்தது.
தாராள பொருளாதார கொள்கை
இந்தநிலையில் தான் இந்தியாவில் 1991-ம் ஆண்டு முதன்முறையாக தாராள பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் அப்போதைய மத்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங் மேற்கொண்ட இந்ந நடவடிக்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி வேகமாக தொழில்கள் தொடங்கின.
இதனால் இந்திய ஏசி சந்தையில் புதிய புதிய நிறுவனங்கள் வரத் தொடங்கின. சாம்சங், வேர்பூல் என பல போட்டியாளர்களை வோல்டாஸ் சந்தித்தது. வோல்டாஸ் பழைய பாணி விண்டோ ஏசிகளையே பெருமளவு விற்பனை செய்து வந்தது. இந்தநிலையில் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் ஸ்பிளிட் ஏசிகள் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் வோல்டாஸ் பெரும் சரிவை சந்தித்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களை இழந்த அந்த நிறுவனம் தடுமாற்றம் கண்டது. இந்திய ஏசி சந்தையில் 40 சதவீதத்தை கையில் வைத்திருந்த வோல்டாஸ் நிறுவனம் 2001-ம் ஆண்டில் சந்தையில் வெறும் 6 சதவீதம் மட்டுமே கையில் வைத்திருந்தது.
அதாவது 1991-ல் 100 ஏசி விற்பனையானால் அதில் 40 வோல்டாஸ் ஏசியாக இருந்தது. அதுவே 2001-ம் ஆண்டில் 100 ஏசிகளில் வெறும் 6 ஏசி மட்டுமே வேல்டாஸ் ஏசி விற்பனையானது. மீதமுள்ள 94 சதவீத சந்தையையும் மற்ற முன்னணி நிறுவனங்கள் ஆக்கிரமித்தன. விற்பனை படிப்படியாக குறைந்தது. ஒருகட்டத்தில் தொழிற்சாலையை மூடும் நிலைக்கு டாடா நிறுவனம் சென்றது. இதுமட்டுமல்லாமல் ஏசிக்கு பதில் பிரிட்ஜ், ஓவன் என பிற பொருட்களில் கவனம் செலுத்தலாம் எனவும் டாடா வியாபார திட்டம் மாறும் நிலைக்கு சென்றது.
இந்தியர்களின் விருப்பம்
இதன் பிறகு தான் வோல்டாஸ் தனது ஏசி விற்பனை சரிவு ஏன் என்ற ஆய்வை தொடங்கியது. இந்த ஆய்வில் தான் பல புதிய தகவல்கள் தெரிய வந்தன. இந்திய மக்களும், ஏசி சந்தையும் பெரிய அளவில் மாறி வருவது தெரிய வந்தது.
ஏசி என்பது எப்படி வேலை செய்கிறது என்பதை தாண்டி, ஏசி மெஷின் எப்படி இருக்கிறது, வோல்டாஸ் ஏசி பற்றிய கருத்து மக்களிடம் எப்படி சென்றடைகிறது என்பதை பற்றி அடுத்தடுத்து பல சந்தை ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், வோல்டாஸ் நிறுவனத்தை விடவும் பல நிறுவனங்கள் வர்த்தக நுட்பத்தில் முன்னணியில் இருப்பது தெரிய வந்தது. அதாவது வோல்டாஸின் விண்டோஸ் ஏசியை மக்கள் டப்பா ஏசி கூறும் அளவுக்கு நிலைமை இருந்தது.
இதனையடுத்து விரிவான சந்தை ஆய்வுக்கு பிறகு வோல்டாஸ் நிறுவனம் உலகின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான பெடர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் விரிவான தயாரிப்பு திறன், தொழிற்சாலை, போன்றவை பெரிய அளவில் வோல்டாஸ் நிறுவனத்துக்கு கைகொடுத்தது.
குறைந்த விலை ஏசி
இதன் மூலம் வோல்டாஸ் ஏசியில் பியூரிபிகேஷன் பில்டர், எக்னாமி மோட் என பல புதிய ஆப்ஷன்கள் கொண்டு வரப்பட்டன. இதுமட்டுமின்றி வோல்டாஸ் தயாரிப்பு செலவை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் இந்தியாவில் 15 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் தான் அதிகமான மக்களை ஏசி வாங்க வைக்க முடியும் என்பது சந்தை ஆய்வில் தெரிய வந்தது.
அதனால் வோல்டாஸ் நிறுவனத்தின் ஆலை தானேயில் இருந்து தாத்ராவுக்கு சென்றது. தாத்ரா தொழில் பூங்காவில் தயாரிப்புகளுக்கு அரசு வரி விலக்கு வழங்கியது. எனவே இந்த வரி விலக்கை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஏசி விலையை குறைக்க முடியும் என்பதால் ஆலையை இடம் மாற்றியது வோல்டாஸ்.
அடுத்ததாக வோல்டாஸ் நிறுவனத்தின் உலகளாவிய கூட்டாளிகள் மலேசியா, தைவான், சீனாவில் 0.6 டன் ஏசிகளை தயாரித்தனர். இதற்கான செலவு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10,000 என்ற அளவில் இருந்தது. எனவே 10 ஆயிரம் ரூபாயில் சிறிய வகை ஏசியை அறிமுகம் செய்தால் ஏர்கூலர் வாங்கும் மக்களை ஏசி வாங்க வைக்க முடியும் என்ற சிந்தனை வோல்டாஸ் நிறுவனத்துக்கு உதித்தது. இந்த புதிய உத்தியால் சிறிய ஏசியின் வருகையால் ஏர்கூலர் வாங்க விரும்பிய மக்களை ஏசி வாங்க வைக்க முடிந்தது.
விளம்பர உத்தி
அடுத்ததாக குறைந்தபட்ச மின்சார நுகர்வு என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தியாவில் நடுத்தர குடும்பங்களில் இந்திய நுகர்வோருக்கு 1000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மட்டுமே ஏசிக்கு மின்சாரம் செலவு செய்யும் திறன் இருப்பது சந்தை ஆய்வில் தெரிய வந்தது. எனவே குறைவான மின்சார நுகர்வு கொண்ட ஏசிகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்பதை வோல்டாஸ் உணர்ந்து கொண்டது.
இதற்கு ஏற்ப வோல்டாஸின் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டன. ஓய்வூதியம் வாங்கும் நபர்கள் கூட செலவு செய்யும் திறன் கொண்ட பொருளாக வோல்டாஸ் ஏசி விளம்பரப்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி இண்டலிஜெண்ட் கூலிங் என்பது போன்ற விளம்பரங்கள் இந்திய நுகர்வோரை பெரிய அளவில் வோல்டாஸ் நிறுவனம் ஈர்த்தது. இன்வெர்ட்டர் ஏசி போன்றவையும் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியது.
அதுபோலவே இந்தியர்கள் மனதில் ஏசி என்பது வெயில் காலத்திற்கான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கொளுத்தும் கோடையை சமாளிக்க ஏசி என்ற அளவில் விளம்பரங்கள் இருந்தன. ஆனால் இதனை மாற்றி எந்த காலநிலைக்கும் தேவையான ஏசி என வோல்டாஸ் நிறுவனம் விளம்பரம் செய்தது. கடுமையான வெயில் மட்டுமல்லாமல் புழுதி, மழை, குளிர்காலம் என அனைத்துக்கும் ஏசி என விளம்பரங்கள் வரத் தொடங்கின. புழுதி உங்களை தாக்காமல் இருக்க ஏசி, மழைகாலத்திலும் பாதுகாப்பான சூழலுக்கு ஏசி, குளர்காலத்தில் குளிரில் இருந்து தப்பிக்கவும் ஏசி என வோல்டாஸ் நிறுவனம் விளம்பரங்கள் செய்தது.
இதனை முன் வைத்து ஆல் வெதர் ஏசி என்ற விளம்பரமும் மக்களை ஈர்த்தது. வோல்டாஸ் விளம்பரங்களில் டெல்லியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சிரபுஞ்சிக்கும் வேலைக்காக மாறுதல் ஆகும் ஒருவருக்கும் எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளும் ஆல் வெதர் ஏசி என வோல்டாஸ் நிறுவனம் விளம்பரம் செய்தது.
அடுத்தாக ஏசி வாங்கும் பலருக்கும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் என்பது பிரச்சினையாக இருப்பதை வோல்டாஸ் நிறுவனம் உணர்ந்தது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் வோல்டாஸ் நிறுவனம் சர்வீஸ் சென்டர்களை அமைத்தது.
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் அகில இந்திய அளவில் 15,000-க்கும் மேலான ரீடெயில் விற்பனை மையங்களை அதிகரித்துள்ளது. இது தவிர, விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதற்கான நெட்வொர்க்கையும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. எட்டு நாடுகளில் மொத்தம் 22 உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. மேலும், வோல்டாஸின் தயாரிப்புகள் 54 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கும் கணிசமான சர்வீஸ் மையங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 24,000 விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்கள் வோல்டாஸ் நிறுவனத்திற்கு இருக்கின்றது.
மீண்டும் முதலிடம்
இந்த மாற்றங்களால் 2001-ம் ஆண்டில் 6 சதவீதமாக குறைந்த வோல்டாஸ் விற்பனை 2012-ம் ஆண்டில் 18.3 சதவீதமாக அதிகரித்தது. முதலிடத்தில் இருந்த எல்ஜி நிறுவனத்தின் சந்தை விற்பனை 2-வது இடத்துக்கு சென்றது. எல்ஜி நிறுவனத்தின் சந்தை விற்பனை 17.7 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டில் இருந்து இன்று வரை வோல்டாஸ் நிறுவனம் தொடர்ந்து இந்திய ஏசி சந்தையில் முதலிடத்திலேயே தொடர்கிறது.
2012-ம் ஆண்டில் இந்திய ஏசி சந்தையில் 18.3 சதவீதமாக இருந்த வோல்டாஸின் பங்கு 2022-ம் ஆண்டில் 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் விற்பனையாகும் 4 ஏசிகளில் ஒன்று வோல்டாஸ் ஏசியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களின் ஏசி இந்தியாவில் வந்து விட்டாலும் இந்தியர்களின் மனம் கவர்ந்த ஏசியாக தொடர்கிறது வோல்டாஸ். இதற்கு உரிய நேரத்தில் மாத்தி யோசித்ததும், மக்களின் தேவை அறித்து திட்டங்களை வகுத்ததும்தான் முக்கியக் காரணம்.