கமாடிட்டி சந்தை: சில அடிப்படை தகவல்கள்

கமாடிட்டி சந்தை: சில அடிப்படை தகவல்கள்
Updated on
3 min read

பங்குச்சந்தை என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது ஆகும். நிறுவனத்தின் பங்குகளை குறைவாக இருக்கும்போது வாங்கி, அதிக விலை வரும்போது விற்பனை செய்வது பங்குச்சந்தை வர்த்தகம். நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் விற்கவும் பங்குச்சந்தைகள் உள்ளன.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பதை போன்றே முதலீட்டாளர்கள், கம்மாட்டி அதாவது பொருட்களை எதிர்கால ஒப்பந்தத்தின் பேரில் வாங்கி, விற்கின்றனர். இதுபோலவே பொருட்களை வாங்கி விற்கும் சந்தை கமாடிட்டி என கூறப்படும் பொருட்கள் முன்பேர சந்தை ஆகும்.

கமாடிட்டி என்பதை எளிமையாகக் கூற வேண்டுமானால், வணிகரீதியான பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள் என கூறலாம். இதன் பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு முன்பே ஒப்புக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பரிமாற்றங்கள் பொருட்களின் அளவு மற்றும் குறைந்தபட்ச தரத்தை வைத்து வர்த்தகத்தில் மதிப்பிடப்படுகிறது.

கமாடிட்டி சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பொருளின் உற்பத்தி, தேவை, அளவு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அப்பொருளின் விலை ஏற்றம் பெறும் என கணித்து வாங்கி வைப்பதுதாகும். அதுபோலவே விலை இறக்கம் அடையும் என கணித்து விற்று வைத்தும், அந்தந்த பொருளின் ஒப்பந்த முடிவு தேதி வரை காத்திருந்து வழங்கும் வர்த்தகமாகும்.

அதாவது லாபம் கிடைக்கும் நாளில் விற்ற கணக்கை நேர் செய்து கொள்ளலாம். வாங்கி வைத்திருந்தால் விற்றும் அல்லது விற்று வைத்திருந்தால் வாங்கியும் ஒப்பந்தம் செய்து லாபம் சம்பாதிப்பதே கமாடிட்டி சந்தையின் அடிப்படை செயல்பாடாகும்.

எந்தெந்த பொருட்கள்

கமாடிட்டி என்பது உணவு, எரிசக்தி, உலோகங்கள் போன்ற பொருட்களை மையமாக வைத்து இயங்குகின்றன. பணத்தைத் தவிர, வாங்கக்கூடிய மற்றும் விற்கக்கூடிய ஒவ்வொரு வகையான அசையும் பொருளாக இது வகைப்படுத்தப்படலாம்.

கமாடிட்டி சந்தையில் இடம் பெறும் பொருட்களை பொதுவாக கடினமானது மற்றும் இலகுவானது என இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, ரப்பர், உலோகங்கள் போன்றவை கடினமான பொருட்கள் வகைப்பாட்டின் கீழ் வருபவையாகும்.

விவசாயம் சார்ந்த விளை பொருட்களான காபி, கோதுமை, சர்க்கரை, சோயா, பருத்தி உள்ளிட்டவை இலகுவான பொருட்களின் கீழ் வரும் பொருட்களாகும்.

பொருட்களை வைத்தும் இதுனை நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம்.

உலோகங்கள்: வெள்ளி, தங்கம், பிளாட்டினம் மற்றும் செம்பு என பிரிக்கப்படுகின்றன.
எரிசக்தி: கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கேசோலின் மற்றும் ஹீட்டிங் ஆயில் என வகைப்படுத்தப்படுகிறது.

விவசாயம்: சோளம். பீன்ஸ், அரிசி, கோதுமை போன்றவை இந்த பிரிவில் இடம் பெறுகின்றன.
கால்நடை மற்றும் இறைச்சி போன்ற பிரிவிலும் பொருட்கள் சந்தையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தை மற்றும் கட்டுப்பாடு

இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு முதல் முன்பேர வர்த்தக சந்தை (commodity) வணிகம் நடைபெற்று வருகிறது. இதனை பார்வேர்ட் மார்கெட் கமிஷன் (FMC) என்ற அரசு ஆணையம் கண்காணித்து முதலீட்டாளர்களை பாதுகாக்கிறது.

உலகம் முழுவதும் கணக்கில் எடுத்து கொண்டால், சுமார் 50 முக்கியமான கமாடிட்டி சந்தைகள் உள்ளன. அதில், உலகளவில் கச்சா எண்ணெய் தான் அதிகளவில் பரிவர்த்தனையாகும் மூலப்பொருளாக உள்ளது.

இந்தியாவில் 25 கமாடிட்டி சந்தைகள் இருக்கின்றன. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) நேஷனல் கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் (NCDEX) நேஷனல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (NMCE) இந்தியன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச், ஏஸ் டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச், தி யுனிவர்சல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (UCX) போன்றவை முக்கிய கமாடிட்டி சந்தைகளாகும்.

2015-ம் ஆண்டு கமாடிட்டிகள் வர்த்தகத்தின் ஒழுங்குமுறை அமைப்பான பார்வர்டு மார்க்கெட் கமிஷன் (எப்எம்சி) இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்துடன் (எஸ்இபிஐ) இணைக்கப்பட்டது. இந்த பரிமாற்றங்களில் கமாடிட்டி வர்த்தகத்திற்கு வழிமுறைகளின்படி நிலையான ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன.

கமாடிட்டி சந்தையில், ஒவ்வொரு கமாடிட்டிக்கும் 10 இலக்க எண் ஒன்று கொடுக்கப்படும். இதனை வைத்து தான் அந்த பொருளின் கையிருப்பு, தரம், அளவு, எதிர்கால வர்த்தகம், சந்தை வாய்ப்பு போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது.

எப்படி முதலீடு செய்வது?

கமாடிட்டிகளில் முதலீடு செய்வதற்கு எதிர்கால ஒப்பந்தம் மூலம் செய்யலாம். ஒரு கமாடிட்டியின் குறிப்பிட்ட அளவை வாங்குவதற்கு அல்லது விற்க ஒப்பந்தமாகும். ஒவ்வொரு கமாடிட்டி வகையிலும் வர்த்தகர்கள் ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் மூலப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடன் கணக்கிட்டு வர்த்தகம் மேற்கொள்கின்றனர்.

அபாயம் உண்டா?

கமாடிட்டிகள் சாதாரண முதலீட்டாளர்களுக்கு அதிக அளவிலான அபாயம் கொண்டது. பொருட்களின் விலை ஏற்றம் இறக்கம் என்பது நாள்தோறும், ஏன் அந்தந்த நேரத்துக்கு ஏற்ப மாறும் என்பதால் அதற்கு ஏற்ப விலையும் மாறுபடும். இதனால் வாங்கும் விற்கும்போது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இந்த பொருட்கள் அனைத்தும் நிறுவனங்கள் விற்கும் சோப்பு போன்றவையோ, எண்ணெய் போன்றவை அல்ல. இவை மூலப்பொருட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலப்பொருட்களின் விலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. இடம், நேரம், ஊக வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறக்கூடியது. பெரிய அளவிலும் மாற்றங்கள் இருக்கும்.

பங்குச்சந்தைகள் கூட குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்து அமையும். எனவே தினசரி அந்த நிறுவனத்தின் லாப- நஷ்டங்களில் மாற்றங்கள் இருக்காது. ஆனால் கமாடிட்டி அப்படியல்ல. தொடர்ந்து மாறக்கூடியது.

அதேசமயம் பங்குசந்தையை போன்று நிறுவனம் என்பது கமாடிட்டி மார்க்கெட்டில் இல்லை. அதற்கு பதிலாக பொருட்கள் தான் உள்ளன. எனவே பங்குச்சந்தையை போல நிறுவனத்தின் செயல்பட்டை கண்காணிக்க வேண்டிய தேவை கமாடிட்டி சந்தையில் இல்லை. அந்த வகையில் நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்து பொருட்களின் நிலை மாறும் என்ற கவலையில்லை.

நஷ்டம் எப்படி பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புண்டோ அதுபோலவே லாபமும் அதிகமாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஏற்ற இறக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக வர்த்தகம் செய்தால் பெரிய லாபங்களை வழங்குகின்றன. குறைந்தபட்ச வைப்பு கணக்கு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் நஷ்டத்தையும், லாபத்தையும் கட்டுப்படுத்த முடியும். எது எப்படியாகினும் அடிப்படை புரிதல்களும், தொடச்சியான ஆய்வும், அனுபவமும் இல்லாமல் கமாடிட்டி சந்தையில் இறங்குவது பெரிய நஷ்டத்தை கொண்டு வந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in