சிபில் கிரெடிட் ஸ்கோர்: கடனை திருப்பிச் செலுத்தினாலும் மதிப்பெண் குறைய வாய்ப்புண்டா?

சிபில் கிரெடிட் ஸ்கோர்: கடனை திருப்பிச் செலுத்தினாலும் மதிப்பெண் குறைய வாய்ப்புண்டா?
Updated on
3 min read

வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் ஒருவர் கடன் கோரி விண்ணப்பித்தால் கடன் ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர் ஒருவரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை சரிபார்க்க அவரது சிபில் ஸ்கோரை வங்கிகள் கருத்தில் கொள்கின்றன. கடந்த காலத்தில் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியுள்ளார்களா என்பது போன்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிபில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

சிபில் ஸ்கோர் என்பது கடன் கோரும் நபரின் கடன் குறித்த மதிப்பெண் ஆகும். இது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். ஒருவர் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, கடன் வழங்கும் வங்கிகள் சரிபார்க்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று, சிபில் ஸ்கோர்.

ஒருவரது கிரெடிட் ஸ்கோர் 900-க்கு நெருக்கமாக இருந்தால் அவர் கடனுக்கு எளிதாக ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே ஸ்கோர் 300-க்கு நெருக்கமாக இருப்பது மோசமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, 700 மற்றும் அதற்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பது சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒரு நபரின் கடந்தகால நிதிசார்ந்த நடத்தையே அவரது எதிர்கால கடன்கள் தொடர்பான செயல்களிலும் தொடரும் என்பதன் அடிப்படையில் சிபில் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

கடன் பெறும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர் அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் ஒழுங்கை அடிப்படையாக வைத்துதான் கிரெடிட் ஸ்கோரானது வழங்கப்படுகிறது. கடனைத் திரும்பச் செலுத்தும் முறை, கடனின் வகை, கடனின் கால அளவு, சம்பளத்துக்கும் கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவிகிதத்தை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறார், ஒரு கடனுக்கும் மற்றொரு கடனுக்குமான கால இடைவெளி என ஒவ்வொன்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அத்துடன் சிபில் அமைப்பு, வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை மட்டும் ஆராய்வதில்லை. வங்கிகளில் கடந்த காலங்களில் நீங்கள் காலம் தாழ்த்திச் செலுத்திய மாதத் தவணை, நிலுவைத் தொகைகள், கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய நிகழ்வுகள்,. நகைக்கடன், கல்விக்கடன், தனிநபர்கடன் உள்ளிட்ட பிறகடன் திட்டங்கள் குறித்த பல்வேறு விவரங்களை வங்கிகளிடமிருந்து பெற்று உங்களை மதிப்பிட்ட பின்னரே கிரெடிட் ஸ்கோர் வழங்குகிறது.

எனவே சிபில் கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளுக்கு கொடுக்கப்படும் விரிவான சிபில் அறிக்கை குறித்த விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே இதனை கவனத்தில் கொண்டு சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்

வாங்கிய கடனில் நிலுவைத் தொகை இருந்தால் அதைக் கட்டிவிட வேண்டும். சில மாதங்களுக்கான தவணையை ஒருவேளை கட்டாமல் இருந்தால் கூட சிபில் ஸ்கோரைக் குறைக்க வாய்ப்பு உண்டு.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சிபில் கணக்கில் சிக்கும் வாய்ப்புண்டு. குறித்த காலத்தை தாண்டி கிரெடிட் கார்டுக்கான தொகையை செலுத்தாமல் விட்டு விட்டால் வங்கி மிக அதிகமான வட்டித் தொகையை வசூலிக்கும். இதனால் சிபில் ஸ்கோரும் குறையத் தொடங்கும்.

வங்கி கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான மாதத் தவணையை தாமாக கடன் கொடுத்த நிறுவனம் எடுத்துக் கொள்ள ஏதுவாக அனுமதி கொடுத்து விட்டால் இந்த சிக்கல் தீரும்.

வங்கியிலிருந்து கடன் பெறுபவர்கள் நீண்டகாலம் கட்டுவதற்கு பதிலாக குறைவான காலத்தில் கட்டி முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக தொகையை மாத தவணையாக நிர்ணயித்து அதனை கட்டுவர். ஆனால் மாதத் தவணைக்கான தொகை என்பது வருவாயில் குறிப்பிடத்தக்க அளவைவிடவும் அதிகமாக இருந்தால் அது சிபில் ஸ்கோரை பாதிக்க வாய்ப்புண்டு.

எனவே கடன் செலுத்த வேண்டிய காலம் சற்று அதிகமானாலும் பரவாயில்லை. இதன் காரணமாக மாதத் தவணையைச் செலுத்துவதில் சுணக்கம் ஏற்படாது. சிபில் மதிப்பெண் அதிகமாகும்.

ஒரு வங்கியில் அதிக அளவுக்குக் கடன் பெற அனுமதி வாங்கிவிட்டு பிறகு குறைவான தொகையை மட்டும் கடனாக பெறுவதும் அல்லது முன்கூட்டியே கடனை திருப்பி அடைப்பதும் சிபில் ஸ்கோரை பாதிக்கும். தேவைப்படும் நிதியைக் கணிக்கத் தெரியாதவர் என கூறி சிபில் மதிப்பெண் குறையும்.

ஒரே நேரத்தில் பலவித வங்கிகளில் கடன்களைப் பெறுபவர்களுக்கும் சிபில் ஸ்கோர் குறையும். ஒரு கடனை அடைத்த பிறகே அடுத்தடுத்த கடன்களுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்கும்.

நீண்ட நாட்களாக ஒரு வங்கிக் கணக்கைச் சிறப்பாகப் பயன்படுத்துபவர்களுக்கும், அதனுடன் கிரெடிட் கார்டு இருந்தால் அதனையும் முறைப்படி பயன்படுத்துபவர்களுக்கு சிபில் மதிப்பெண் உயர வாய்ப்புண்டு.

கடனை திருப்பிச் செலுத்திய பிறகு….

ஒரு பெரிய கடன் தொகையை வங்கிக்குச் செலுத்தி முடித்தபின் அந்த விவரத்தை அந்த வங்கி சிபில் அமைப்புக்குத் தெரியப்படுத்தி விட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஏதாவது பெரிய வங்கிக் கடனை முழுவதுமாகச் செலுத்திய பிறகு www.cibil.com என்ற வலைத்தளத்துக்குச் சென்று சிபில் மதிப்பெண் என்னவாக இருக்கிறது என்று பார்த்து உறுதி செய்ய வேண்டும். மதிப்பு மிகவும் குறைவாக இருந்தால் வங்கியின் மூலம் சிபில் அமைப்பை அணுகி தீர்வு பெறலாம். அதன் பிறகு சிபில் ஸ்கோர் சரியாகும்.

வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணைகளை ஒவ்வொரு மாதமும் ரொக்கமாகச் செலுத்துவது அல்லது ஒவ்வொரு மாதமும் அந்தத் தவணைக்கான காசோலையை உங்கள் கடன் கணக்கில் கட்டுவது என்பதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. அவசரத் தேவையால் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு அது சிபில் ஸ்கோரை பாதிக்கும்.

அடிக்கடி பார்க்கக் கூடாதா?

சிபில் ஸ்கோரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மதிப்பெண் குறைய வாய்ப்பு என கூறப்படுவதுண்டு. ஆால் இது உண்மையல்ல. ஒருவர் தங்களது கிரெடிட் ஸ்கோரைப் அடிக்கடி பார்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் கடன் வாங்கப் போகும்போது, குறிப்பிட்ட வங்கியோ, நிதி நிறுவனமோ, உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆய்வுசெய்வது, ஹார்டு என்கொய்ரி என்று கூறப்படுகிறது. அதாவது கடன் வழங்குபவர்கள் உங்கள் மதிப்பெண் அதிகமாக சோதித்தால் அவரது நம்பகத் தன்மையை சோதிப்பதாக கருதப்படும். எனவே இது சிபில் ஸ்கோரை குறைக்கும் நடவடிக்கையாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in