

உழைத்து முடிந்து முதுமையில் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. உழைக்கும் காலத்தில் உழைத்து சம்பாதிக்க இயலும். ஆனால் முதுமையில் இதற்கு வாய்ப்பில்லை. ஆனால் முதுமையில் தான் மருத்துவ செலவு உட்பட பல செலவுகள் இருக்கும். எனவே பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கனவாக உள்ளது.
ஆனால் அரசு ஊழியர்களுக்கு கூட உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டம் 2004-ம் ஆண்டுக்கு பிறகு சேர்பவர்களுக்கு இல்லை. அதற்கு மாற்றாக வந்ததே தேசிய ஓய்வூதிய திட்டம்.
இதில் பென்ஷன் பெற முதலீடு செய்ய வேண்டும். நிலையான ஒரு தொகையை மாதம் தோறும் செலுத்தி வந்தால் அதில் சேரும் தொகையில் இருந்து பென்ஷன் பெற முடியும்.
ஏறக்குறைய சிறு சேமிப்பு திட்டமாக இது தோன்றினாலும் ஓய்வூதியம் என்ற கட்டமைப்புக்குள் வருவதால் அதற்குரிய சலுகைகளை கொண்டுள்ளது. இதுபோன்ற அரசின் ஓய்வூதிய திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டமாகும்.
எளிதான பென்ஷன்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) நிர்வகிக்கிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் ஓய்வூதியத் திட்டமாகும். தேசிய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரையில் சிறந்த சந்தை அடிப்படையிலான வருமானத்துடன் கூடிய குறைந்த தொகை முதலீடு செய்யும் வாய்ப்பு கொண்டதாகும்.
அஞ்சல் துறை, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய கணக்கை தொடங்க வேண்டும். இதற்காக பிரான் எண் (PRAN- Permanent Retirement Account Number) தரப்படுகிறது. இதில் சேமிக்கலாம்.
இது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன் பெறலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் இணைந்தவர்களும் கூட இந்த திட்டத்தில் சேர முடியும்.
இத்திட்டத்தில் சேர முதலில் ரூ. 600 செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ. 100 வீதம் செலுத்த வேண்டும். ரூ.100 செலுத்தினால் கணக்கில் ஆண்டுக்கு ரூ.100 மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்களுக்கு மட்டும்).
அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரை தான் மத்திய அரசின் 1000 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை.
என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 சேமித்தால் ஓய்வுகாலத்தில் ரூ.1கோடி வரை கிடைக்கும். ஒருவர் தனது 25-வது வயதில் தினமும் ரூ.74 என மாதத்துக்கு ரூ.2,230 சேமித்தால் 40 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரையில் வருமானம் கிடைக்கும். 65-வது வயதில் அதற்குரிய பென்ஷன் மாதம் ரூ.27,500 கிடைக்கும். இது ஒரு கணக்கீடு மட்டுமே. இதில் உள்ள தொகை வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் 8% முதல் 12% கூட்டு வட்டியுடன் பென்ஷன் கிடைக்கும். தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து உங்களது ஓய்வூதியத் தொகையின் ஒரு பகுதியை 60 சதவீதம் வரை முறையான காரணங்களுக்காக பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
முக்கிய தகவல்கள்
க்ஷ
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவும் நடத்தப்படும் POP-களில் ஏதேனும் ஒன்றில் கணக்கைத் திறந்து நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணைப் (PRAN) பெறலாம்.
விண்ணப்பதாரர் தனது சொந்த முதலீட்டு விருப்பத்தையும் ஓய்வூதிய நிதியையும் தேர்வு செய்யலாம். சிறந்த வருவாயைப் பெற ஆட்டோ தேர்வைத் தேர்ந்தெடுக்கலாம்.
நாட்டில் எங்கிருந்தும் ஒரு ஓய்வூதிய கணக்கை இயக்கலாம். ஓய்வூதிய கணக்குதாரர் வேலையை மாற்றினாலும், இருப்பிடத்தை மாற்றினாலும் எந்தவொரு POP-கள் மூலமாகவும் பங்களிப்புகளைச் செலுத்தலாம்.
சந்தாதாரர் வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றால், கணக்கை அரசுத் துறை, கார்ப்பரேட் மாதிரி போன்ற வேறு எந்தத் துறைக்கும் மாற்றும் வசதியும் உண்டு.
தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ள வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 918588852130 என்ற எண்ணில் வாடஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.